கோபாலபுரத்தில் குத்துச்சண்டை அகாடமி: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
1 min read
Boxing Academy in Gopalapuram: Chief Minister lays foundation stone
2.11.2023
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 23 கோடியே 13 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு விடுதி, நிர்வாக அலுவலகக் கட்டிடம் மற்றும் தங்கும் விடுதி, உள்விளையாட்டு அரங்கம், செயற்கை இழை தடகள ஓடுதளம் மற்றும் 5 நபர் அணிகளுக்கான செயற்கை இழை ஆக்கி மைதானம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
9 சட்டமன்றத் தொகுதிகளில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்களும், கோபாலபுரத்தில் 7.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குத்துச்சண்டை அகாடமியும், தென்காசி மாவட்டம், பட்டக்குறிச்சி கிராமத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு வளாகம் ஆகிய விளையாட்டு உட் கட்டமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் மூன்று விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் இளநிலை அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், ஸ்ரீவைகுண்டம், ஆலங்குடி, காரைக்குடி மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளில் தலா 3 கோடி ரூபாய் வீதம், மொத்தம் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்கள் கட்டப்பட உள்ளது.
மேலும், தென்காசி மாவட்டம், பட்டக்குறிச்சி கிராமத்தில், அனைத்து வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மற்றும் உள்விளையாட்டரங்கங்களை உள்ளடக்கி 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாவட்ட விளையாட்டு வளாகம் மற்றும் சென்னை, கோபாலபுரத்தில் 7 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள குத்துச்சண்டை அகாடமி ஆகிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மு.பெ. சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.