June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

அரசு நிர்வாகத்தை முடக்க கவர்னர் பதவி மூலம் அரசியல் செய்கிறார்கள்: முதலமைச்சர் குற்றச்சாட்டு

1 min read

Politicizing through governorship to paralyze state administration: Chief minister alleges

18.11.2023
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுகளை மீண்டும் சட்டசபையில் மறுஆய்வு செய்து நிறைவேற்றிடும் அரசின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது:-

“மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை” என்றார் புரட்சியாளர் மா சே துங். காய்ச்சல், தொண்டை வலி காரணமாக சில நாட்கள் வீட்டில் நான் ஓய்வெடுத்து வந்தாலும், எனது உடல்நலனைவிட இந்த மாநிலத்து மக்கள் நலன்-தாய்த்தமிழ் நாட்டின் நலன், நூற்றாண்டு கண்ட இந்த சட்டப் பேரவை நலன் தான் அதைவிட முக்கியம் என்ற மன உறுதியோடு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் நம்மை, இந்திய அரசியல் சட்டம் வழங்கிய அதிகாரத்தின் மையமாக இருந்து சட்டமியற்றும் இந்த சட்டமன்றத்தை தடுக்கும் சக்தி ஒன்று முளைக்குமானால், இந்தச் சூழ்நிலை என்பது இந்திய ஜனநாயகத்தை மிக மோசமான வகையில் கொண்டு செலுத்திவிடும் என்ற அச்சத்துடன் தான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருகிறோம்.
சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் காத்தல் ஆகிய கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு, எண்ணற்ற மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை இதே சட்டமன்றத்தில் அறிவித்துச் செயல்படுத்தி வருவதை இன்றைய தினம் அனைத்துத் தரப்பினரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் தமிழ்நாட்டை வளப்படுத்தும் திட்டங்களாக மட்டுமல்ல, இந்தியாவுக்கான வழிகாட்டும் திட்டங்களாக அமைந்து வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையைக் கெடுக்கும் வகையில் என்றுகூடச் சொல்ல மாட்டேன்; தடுக்கும் வகையில் சில இடையூறுகள் இருக்கின்றன என்பதையும் இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள்.
ஒன்றிய அரசின் சில இடையூறுகள்

இவை மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் பல திட்டங்களை எங்களால் செய்து காட்ட முடியும் என்று இதே மாமன்றத்தில் ஓராண்டுக்கு முன்னதாக நான் குறிப்பிட்டதையும் நினைவூட்டக் கடமைப்பட்டு உள்ளேன்.

இடையூறுகள் என்று நான் சொன்னதன் விளைவாகத்தான் இந்தச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதாக உள்ளது.

பொதுவாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டங்கள், முக்கிய நிகழ்வுகளுக்காகவும், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காகவும் கூட்டப்படுவது வழக்கம்.

அதேபோல் நாம் இன்றைக்கு கூட்டியிருக்கும் சிறப்புக் கூட்டம், அவசர, அவசியம் கருதி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியும், ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தின் அடிப்படையிலும், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியும் கூட்டப்பட்டுள்ளது.
மக்களாட்சித் தத்துவத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் இந்தச் சட்டமன்றப் பேரவையில் நாம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார் ஆளுநர்.

“i withhold assent” அதாவது, தான் அனுமதியை நிறுத்திவைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, நாம் இங்கு நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளை கடந்த 13.11.2023 அன்று திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார். கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவுகளை நாம் இங்கே மீண்டும் நிறைவேற்றி, அவரது ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்க இருக்கிறோம். அதற்காகத்தான் இன்றைக்கு இந்தச் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

மக்களாட்சித் தத்துவத்தின் படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மைமிக்க ஒரு அரசால், மாநில நலன் கருதி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது கவர்னரின் கடமை. அவருக்கு அதில் சட்டரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக ஏதேனும் தெளிவுரை தேவைப்பட்டால், அதனை அவர் அரசிடம் கோரலாம். அதனை அரசு வழங்க வேண்டும். அந்த வகையில் இதற்கு முந்தைய சில நிகழ்வுகளில் அவர் எழுப்பிய சில வினாக்களுக்கு முறையாக எழுத்து மூலமாகவும், சம்மந்தப்பட்ட அரசு செயலர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரிலும் விளக்கம் அளித்து உள்ளனர்.

எந்த ஒரு நிகழ்விலும் அவர் கோரிய விளக்கங்கள் அவருக்கு வழங்கப்படாமல் இருந்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் அவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சில சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி வழங்காமல் திருப்பி அனுப்பி வைத்திருப்பது என்பது தமிழ்நாட்டு மக்களையும், இந்தச் சட்டமன்றத்தையும் கவர்னர் அவமதிக்கின்றார் என்றுதான் பொருளாகும்.

10 சட்டமுன்வடிவுகள் உள்ளிட்ட 12 சட்டமுன்வடிவுகள் மற்றும் வேறு சில கோப்புகளுக்கும் இவர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டவிரோதம் ஆகும்! ஜனநாயக விரோதம் ஆகும்! மக்கள் விரோதம் ஆகும்! மனச்சாட்சி விரோதம் ஆகும்! அனைத்திற்கும் மேலாக இந்த சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானதாகும்!

தமிழ்நாட்டுக்கு கவர்னராக இருப்பவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்; தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஒன்றிய அரசிடம் அவருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டுக்கான நிதியை வாங்கித் தருவதற்கு முயற்சிக்கலாம்; ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையைப் பெற்றுத் தரலாம்; எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நிதியை வாங்கித் தரலாம்; புதிய ரெயில்வே திட்டங்களைப் பெற்றுத் தரலாம்; மாநில ஆட்சிக்கும், ஒன்றிய அரசுக்கும் பாலமாக இருக்கலாம். ஆனால், இதில் எதையும் செய்யாமல், மாநில அரசின் திட்டங்களுக்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என நாள்தோறும் யோசித்து யோசித்து செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திராவிடக் கொள்கை, சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பது அவருக்கு ஏற்கவியலாத ஒன்றாக உள்ளது.

பொதுமேடைகளில் அவர் நமது தமிழ்ப்பண்பாடு, இலக்கியம் மற்றும் சமூக அமைப்பிற்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். தெரிவித்துக் கொண்டும் வருகிறார்.

அவர் தெரிவிக்கும் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது, அவருக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத்துக்குமான பிரச்சனை என்பது நாம் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களில் மட்டுமல்ல; சமூகநீதியாகவும் இருக்கிறது. அதனால்தான் முடிந்தளவு அனைத்து வகையிலும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

கவர்னரிடம் தேங்கிக் கிடக்கும் அனைத்துக் கோப்புகள், சட்ட முன்வடிவுகள் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

தமிழ்நாடு அரசு எடுத்துரைத்த வாதங்களைக் கவனித்துக் கேட்ட உச்சநீதிமன்றம், கவர்னரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்த கருத்துகள், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியாகும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் இத்தருணத்தில், கவர்னர் அவசர அவசரமாக 10 சட்டமுன்வடிவுகளுக்கு எவ்வித ஒப்புதலும் வழங்காமல், கடந்த 13-11-2023 அன்று கோப்புகளைத் திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குத்தான் முழு அதிகாரமும் முதன்மையும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-இன்படி, இந்தச் சட்டமுன்வடிவுகளை மீண்டும் பரிசீலித்து, ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கும் அதிகாரம் இந்த மாமன்றத்திற்குத் தான் உள்ளது.

அந்த அடிப்படையில் தான், இந்த 10 சட்ட முன் வடிவுகளும் இன்றைக்கு உங்கள் முன் வைக்கப்பட்டு உள்ளது.

ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, இந்திய நாடு இதுவரை கண்டிராத முன்னோடித் திட்டங்களை நிறைவேற்றி, மக்களின் எண்ணங்களில் இடம் பிடித்துள்ளது திராவிட முன்னேற்றக் கழக அரசு.

இதனை அரசியல் ரீதியாக சகித்து கொள்ள இயலாத சிலர், அரசு நிர்வாகத்தை முடக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலமாக அரசியல் செய்ய விரும்புகிறார்கள்.

கவர்னர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும் அது இருக்கும் வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு அடங்கி இருக்க வேண்டியது தான் மரபு ஆகும். பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில், கவர்னர்களின் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.

தெரிந்ததை அவர் செய்கிறார். செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் நாம் எப்போதும் சட்டத்தின் வழி நடப்பவர்கள். எனவே, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-ன்படி அவர் எந்தக் காரணமும் குறிப்பிடாமல் திருப்பி அனுப்பி வைத்துள்ள 10 சட்டமுன்வடிவுகளையும் நிறைவேற்றித் தருமாறு நூற்றாண்டு கண்ட இச்சிறப்புமிக்க சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர்களை தங்கள் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *