July 22, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் வீசப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டது

1 min read

Garbage dumped in Kadayam was removed.

20.7.2026
கடையத்தில் சமூக விரோதிகளால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் வீசப்பட்ட பல நூறு மூடை குப்பைகள் செய்தி ஊடகங்களில் வெளியான செய்தியின் தாக்கத்தால் அரசு நிர்வாகம் அதிவேகமாக செயல்பட்டு அகற்றியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையத்தில் இறப்பன் பாலம் அருகிலுள்ள கீழக்கடையம் அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சமூக விரோதிகளால் மர்மமான முறையில் நூற்றுக்கணக்கான மூடை குப்பைகள் வீசப்பட்டிருந்தது. பிரிக்கப்பட்ட சில மூடைகளில் இருந்த குப்பைகளை சோதித்ததில் செல்போன் கழிவுகள், உபயோகப்படுத்தப்பட்ட ஒயர்கள், மருந்து பாட்டில்கள் போன்ற கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. பிரிக்கப்படாத பல நூறு மூட்டைகளில் இதேபோன்ற கழிவுகள் தான் உள்ளதா அல்லது வேறேதும் மர்ம பொருட்கள் உள்ளதா என்பது தெரியவில்லை.

இந்த செய்தி பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் நேற்று வைரலாகி பொதுமக்களிடம் தீயாகப் பரவியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பையடுத்து ஊரக வளர்ச்சி துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை நிர்வாகங்களும் தென்காசி மாவட்ட அரசு நிர்வாகத்தால் முடுக்கி விடப்பட்டு குப்பைகள் வீசப்பட்ட இடத்திற்கு பறந்து வந்து ஆய்வுகள் நடத்தின.

இதைத் தொடர்ந்து முதற்கட்டமாக சமூக விரோதிகளால் வீசப்பட்ட பல்வேறு கழிவுப் பொருட்கள் அடங்கிய பல நூறு மூடை குப்பைகளை அந்த இடத்திலிருந்து அகற்றி கீழக்கடையம் ஊராட்சி மன்றத்திற்கு சொந்தமான குப்பை கிடங்கிற்கு ஜேசிபி எந்திரம் மற்றும் டிராக்டர்கள் மூலம் மாற்றப்பட்டது.

மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் ஆலோசனைப்படி பாதுகாப்பான முறையில் அழிக்கவோ அல்லது மறுசுழற்சி செய்யவோ மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்குமென முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த சமூகநல ஆர்வலர்களும் பொதுமக்களும் தினசிம்மம் போன்ற பத்திரிகைகளும் ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் விரைந்து செய்தி வெளியிட்டதன் மூலமாகவே அரசு நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *