மசோதாக்கள் நிலுவை: 3 ஆண்டுகளாக கவர்னர் என்ன செய்து கொண்டிருந்தார்? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
1 min readBills pending: What has the governor been doing for 3 years? Supreme Court Question
20.11.2023
தமிழக கவர்னர் மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ள விவகாரத்தில் 3 ஆண்டுகளாக கவர்னர் என்ன செய்து கொண்டிருந்தார்? என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது.
கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் கவர்னர்களுக்கும், ஆளும் மாநில கட்சிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
குறிப்பாக மாநில சட்ட சபைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு கவர்னர்கள் உடனுக்குடன் அனுமதி வழங்குவது இல்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. தமிழகத்தில் கவர்னரிடம் 12 மசோதாக்களும், கேரளாவில் கவர்னரிடம் 8 மசோதாக்களும் நிலுவையில் இருக்கின்றன.
தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் செய்தும் கவர்னர்கள் தரப்பில் இருந்து முழுமையான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதையடுத்து கவர்னர்கள் தங்கள் பார்வைக்கு வரும் சட்ட மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு, கேரள மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்துள்ளன. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 10-ந்தேதி இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், ” மாநில சட்ட சபைகளில் நிறைவேற்றப் படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர்கள் ஏற்படுத்தி வரும் தாமதம் மிகவும் கவலைக்குரியது” என்று கூறி இருந்தனர். இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
இதற்கிடையே தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வாரம் 10 மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக தகவல் அனுப்பினார். இதையடுத்து தமிழக அரசு நேற்று முன்தினம் சிறப்பு சட்டசபை கூட்டத்தை நடத்தி மீண்டும் அந்த 10 மசோதாக்களையும் நிறைவேற்றி அவருக்கு அனுப்பி வைத்தது.
தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை அவசரம் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவர் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆேலாசனை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விசயத்தில் கவர்னர் மாளிகை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை வக்கீலிடம் விளக்கி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் கவர்னர்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முதலில் கேரள அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு சார்பில் மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி “2 ஆண்டுகளுக்கு மேலாக 3 அவசர சட்டங்கள் மற்றும் 8 மசோதாக்களுக்கு கவர்னர் ஆரிப்கான் ஒப்புதல் தரவில்லை” என்று வாதாடினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கேரள கவர்னர் ஆரிப்கானின் செயலாளர் பதில் அளிக்கும்படி அவ ருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
அதன் பிறகு தமிழக அரசு சார்பில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்ேபாது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், “சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை உரிய விளக்கம் இல்லாமல் கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த மசோதாக்கள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் அளிக்க கால அவகாசம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திடம் வந்து முறையிட முடியாது. 7.3 கோடி மக்களுக்கு அரசு பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளது.
மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததால் தமிழ்நாடு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2020 முதல் 13-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கவர்னர் தாமதம் செய்கிறார்.
இவ்வளவு காலம் மசோதாக்களை கிடப்பில் போட்டு விட்டு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருக்கிறது என்றவுடன் அதை திருப்பி அனுப்பி இருக்கிறார்” என்றார்.
அதற்கு நீதிபதிகள், “அந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள் உள்ளனவா? அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்” என்றனர்.
அதற்கு மத்திய அரசு தலைமை வக்கீல், “சிறு குறிப்பு வடிவிலான ஆவணம் உள்ளது. அதனை நகல் எடுக்க வேண்டும்” என்றார்.
அதற்கு நீதிபதிகள், “அந்த சிறு குறிப்பை நீதி மன்றத்தில் சமர்ப்பியுங்கள்” என்றார்.
பின்னர் மூத்த வக்கீல் வில்சன் ஆஜராகி, “தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதா வழக்கும் இன்று பட்டிய லிடப்பட்டுள்ளது. அதனை யும் இந்த வழக்கோடு இணைத்து விசாரிக்க வேண்டும்” என்றார்.
தமிழக அரசு மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி வாதாடுகையில், “ஏற்கனவே மசோதாக்கள் இயற்றப்பட்டு அனுப்பிய நிலையில் அதனை கிடப்பில் போட்டு விட்டு தற்போது 10 மசோதாக்களை கவர்னர் திரும்ப அனுப்பி உள்ளார். அதனை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டு உள்ளது” என்றார்.
அடுக்கடுக்கான கேள்வி
அப்போது நீதிபதிகள், “சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் இருக் கும் போது கூட ஏன் இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பி யது ஏன்?
3 ஆண்டுகளாக கவர்னர் என்ன செய்து கொண்டி ருந்தார்? நவம்பர் 10-ந்தேதி கோர்ட்டில் உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. நவம்பர் 13-ந்தேதி மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதா? என்று நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.
பின்னர் தமிழக அரசு தரப்பில் வாதாடிய வக்கீல், “சட்டமன்றம் இயற்றிய மசோதா தவறாக இருந்தா லும் அதனை நிறுத்தி வைக்க கவர்னருக்கு என்ன அதிகா ரம் உள்ளது. 2-ம் முறையாக இயற்றி அனுப்பியுள்ள மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
ஏற்கனவே மசோதாவை கிடப்பில் போட்டு விட்டு தற்போது திருப்பி அனுப்பி யது ஏன்? 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோ தாவை நிதி மசோதாவா கத்தான் பார்க்க வேண்டும். உரிய காரணங்கள் இன்றி மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பினார். தமிழக கவர்னர் ஒவ்வொரு நிபந்தனையையும் மீறி இருக்கிறார். மாநில அரசு மற்றும் அமைச்சர்களின் ஆலோசனைப்படி ஒரு கவர்னர் செயல்பட வேண்டும்” என்று வாதாடினார்.
அதற்கு நீதிபதிகள், “பெறப்பட்ட 181 மசோதாக்களில் 152 மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கவர்னர் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது அனுப்பப்பட்டுள்ள மசோ தாக்கள் மீது நடவடிக்கை எடுக்க கவர்னருக்கு அவ காசம் தர வேண்டும்” என்றனர்.
அதற்கு தமிழக அரசு தரப்பில், “மசோதாக்கள் மீது withhold என கவர்னர் கூற முடியாது. உரிய காரணங்கள் வழங்கப்பட வேண்டும்” என்றனர்.
அதற்கு மத்திய அரசு வக்கீல், “கவர்னருக்கு உள்ள துணைவேந்தர்கள் நியமன அதிகாரத்தை மாநில அரசு பறிக்க முயல்கிறது. மசோ தாக்களுக்கு மறைமுக ஒப்புதல் பெற முயலும் இது போன்ற மனுக்களை அனு மதிக்கக் கூடாது” என்று வாதாடினார்.
பின்னர் தலைமை நீதிபதி, “மசோதாவை நிறுத்தி வைப்பதாக கூறும் போது அதை மறு பரிசீலனைக்கு அனுப்பலாம் என கருத முடியுமா? கூடிய விரைவில் மசோதாக்களை காரணங்களுடன் திருப்பி அனுப்ப வேண்டும். மசோதாக்களை பரிசீலித்த பிறகே நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.
இவ்வாறு வாதம் நடந்தது.
அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணையை டிசம்பர் 1-ந்தேதிக்கு நீதிபதி கள் தள்ளி வைத்தனர்.