September 18, 2024

Seithi Saral

Tamil News Channel

அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

1 min read

Chief Minister M.K.Stal’s order to officers

30.11.2023
சென்னை, ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, மழைநீர் வெள்ள பாதிப்பு தொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் உரையாடிய முதலமைச்சர், அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், ரிப்பன் மாளிகையில் தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரை முதலமைச்சர் சந்தித்து, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, மீட்பு உபகரணங்களையும் அவர் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும் என்றும், மின்தடை ஏற்படக்கூடிய இடங்களில் உடனடியாக மக்களுக்கு எந்தவித இடையூறிமின்றி மின்விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், தற்போது பெய்துவரும் கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிவுடம், புதிதாக புயல் உருவாகவுள்ளதையொட்டி அதன்பொருட்டு பெய்யும் கனமழையால் அடுத்து வரும் சில நாட்களில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், சாலைகள், சுரங்கப் பாதைகள் இவற்றில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றிட தேவையான மின் மோட்டார்கள் அமைத்திடவும், மழைநீர் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கிடவும், அப்பகுதியின் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென்று உத்தரவிட்டார்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைகளின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு நீர்த்தேக்கங்களில் நீர் மேலாண்மை செய்வது, 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை தகவல்கள் வழங்குவது, பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்களை முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் இதர நிவாரண மையங்களை அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருப்பது ஆகிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கும் திரும்புமாறும், கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும், பொதுமக்களுக்கு புயல் குறித்த எச்சரிக்கையும் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முப்படையினை தயார் நிலையில் வைத்திட முப்படையினைச் சார்ந்த அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு பணிகளுக்கென மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைளை மேற்பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர்.

121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4,967 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன.

மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.

புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், Twitter, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் 5.23 இலட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று காலை முதல் புழல் நீர்த்தேக்கத்திலிருந்து 2000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், தமிழ்நாடு கமாண்டோ படையினைச் சார்ந்த 50 வீரர்கள் கொண்ட 2 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சார்ந்த 25 வீரர்கள் கொண்ட ஒரு குழுவும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் 162 நிவாரண மையங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 296 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.