அ.தி.மு.க. பெயர், கொடியைப் பயன்படுத்த மாட்டேன்: நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு உத்தரவாதம்
1 min readA.D.M.K. Will not use name, flag: OPS party guarantees in court
30.11.2023
அ.தி.மு.க. சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், அ.இ.அ.தி.மு.க. பெயர், அண்ணா படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை விதிக்க வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். சின்னத்தைப் பயன்படுத்துவதால் தொண்டர்களிடம் குழப்பம் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், என்னை பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில் ஓ.பி.எஸ். பயன்படுத்த கூடாது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தடை உத்தரவின்படி அதிமுக பெயர் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்தப் போவதில்லை என ஓ.பி.எஸ். தரப்பு உத்தரவாதம் அளித்துள்ளது.
மீறினால் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரும்படி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அறிவுறுத்திய நீதிமன்றம், வழக்கு விசாரணையை டிசம்பர் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.