மிசோரத்தில் ஆட்சியை கைப்பற்றிய சோரம் மக்கள் இயக்கம்
1 min readSoram People’s Movement took power in Mizoram
5.12.2023
40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டசபைக்கு கடந்த மாதம் 7ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 21 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி செய்கிறது. அம்மாநில முதல் மந்திரியாக ஜொராம்தங்கா செயல்பட்டு வருகிறார். அதேவேளை, சோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை முக்கிய எதிர்க்கட்சிகளாக திகழ்கின்றன.
இதனிடையே, மிசோரம் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், எதிர்க்கட்சியான சோரம் மக்கள் இயக்கம் கட்சி 27 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையுடன் மிசோரத்தில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
மிசோரம் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக சோரம் மக்கள் இயக்கம் கட்சி தலைவர் லால்டுஹொமா பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. மேலும், பாஜக 2 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.