February 26, 2024

Seithi Saral

Tamil News Channel

சென்னை வெள்ளம் குறித்து விமரித்த நடிகர் விசாலுக்கு மேயர் பதில்

1 min read

Mayor’s response to actor Vishal who commented on Chennai floods

5.12.2023
சென்னை வெள்ளம் தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்ட பதிவுக்கு மேயர் பிரியா பதில் அளித்துள்ளார்.

புயல் மழை

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. நேற்று சென்னையில் தொய்வின்றி பெய்த மழையால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னையின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், பல இடங்கள் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

விஷால் விமர்சனம்

இதற்கிடையே சென்னை மாநகராட்சியை விமர்சித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:-
எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான் புயல் வந்தால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும், பின்னர் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்குள் வரும். அண்ணாநகரில் உள்ள என் வீட்டில் கூட ஒரு அடிவரை தண்ணீர் தேங்கியுள்ளது. இங்கு இந்த நிலைமை என்றால் தாழ்வான பகுதிகளில் இதை விட மோசமானதாக இருக்கும்.
2015ல் நடந்தபோது எல்லாரும் ஒன்றாக இணைந்து இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவு பொது மக்களுக்கு சேவை செய்தோம். 8 வருடங்களுக்கு பிறகு அதைவிட மோசமான ஒரு நிலை ஏற்பட்டிருப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியது. அது எங்கே தொடங்கி எங்கே முடித்தார்கள் என்று தெரியவில்லை. நான் இதை ஒரு நடிகனாக கேட்கவில்லை, வாக்காளராக கேட்கிறேன்.
இது ஒரு முக்கியமான பதிவு. தயவு செய்து அரசாங்க அதிகாரிகள் வேலை செய்து மக்களுக்கு உதவ வேண்டும். ஏனென்றால் நாங்கள் வரி கட்டுகிறோம். நாங்கள் எதற்காக வரி கட்டுகிறோம் என்று கேட்க வைத்து விடாதீர்கள். மக்கள் நீங்கள் உதவி செய்வீர்கள் என்று எதிர்பார்ப்பார்கள். கண்டிப்பாக இந்த நேரத்தில் உங்கள் முகம் தெரிந்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேயர் பதிலடி

அந்த பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக சென்னை மேயர் பிரியா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

2015ம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்.

2015 பெருவெள்ளத்திற்கு பிறகும் ஐந்தரை ஆண்டுகளை ஆண்டது அதிமுக அரசுதான். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்தாண்டுகளாக அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. மழைநீர் வடிகால் திட்டத்தை முதன்மையான திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி. திமுக பொறுப்புக்கு வந்த 2021 மே மாதத்தில் இருந்து மழைநீர் வடிகால் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்தது. அப்படியான பணிகளால்தான் சென்னை காப்பாற்றப்பட்டிருக்கிறது. அந்த மழைநீர் கால்வாய்கள் மூலம்தான் கடந்த வாரம் முன்பு வரை பெய்த மழைநீர் எல்லாம் வெளியேறியது.

அதனை எல்லாம் பலர் பாராட்டி எழுதியது எல்லாம் உங்களுக்கு தெரியுமா? இப்போது பெய்துள்ள பெருமழை 2015-ம் ஆண்டைவிட அதிகம். பல ஆண்டுகளில் வரலாறு காணாத மழை. புயலால் கடல் கொந்தளிப்பு அதிகம் இருப்பதால்தான் மழைநீர் கால்வாய் மூலம் கடலில் கலக்க முடியாத சூழலில் மழைநீர் தேங்கியது. 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அப்படியான நிலையா இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது? 2015-ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

செம்பரம்பாக்கம் ஏரியைகூட முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டார்கள். இன்று மாண்புமிகு முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 6 லட்சம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கியிருக்கிறோம். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.