June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

வெள்ள பாதிப்பு பற்றி உயர்மட்டக் குழு விசாரணை ரவிஅருணன் கோரிக்கை

1 min read

Ravi Arunan demands a high-level committee inquiry into the flood impact in southern districts

24.12.2023
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட வெள்ளப்பெருக்கு குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் என்று முன்னாள் தென்காசி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினரும், இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவருமான கே.ரவிஅருணன்
தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது;-

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேல் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெள்ளத்தை சந்தித்திருக்கின்றன.

டிசம்பர் 14ஆம் தேதி தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு மிக கனத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 14ஆம் தேதி நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி ஆகியவை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தன

டிசம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் மேற்கண்ட அணைகளில் தண்ணீரை படிப்படியாக வெளியேற்றி குறைத்திருந்தால் 16 மற்றும் 17ஆம் தேதி பெய்த கனமழையால் இவ்வளவு பெரிய பாதிப்பு இருந்திருக்காது என்று பொதுமக்களால் பரவலாக பேசப்படுகிறது. இரண்டு நாட்கள் பெரும் கனமழையுடன் மேற்படி அணைகளில் அதிக அளவில் ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்து விட்டதாலும், ஆங்காங்கே குளக்கரைகள் மழைக்காலத்திற்கு முன்பே பலப்படுத்தாமல் இருந்ததாலும் உடைப்பு ஏற்பட்டு மிகப்பெரிய வெள்ளப்பெருக்குஏற்பட்டது.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல கோடி ரூபாய்க்கு பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு நாம் சந்ததித்த துயரங்கள் ஏராளம் எங்களது பகுதியான தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் 14ம் தேதி வானிலை ஆய்வு மையத்தின் மிக கனமழையை எச்சரிக்கையை அறிந்ததும்வயல்களில் உடைப்பு ஏற்படும் என்பதால் முன்கூட்டியே வயல்களில் தேங்கி இருந்த தண்ணீரை வடியச் செய்தனர். இதனால் இரு நாட்கள் பெய்த பெரும் மழையால் வயல்களில் எந்த உடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்க முடிந்தது.

இதே நடைமுறையை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பின்பற்றி இருந்தால் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டிருக்காது.
14 ஆம் தேதி அதிக கன மழைக்கான எச்சரிக்கை விடுத்த பின்பு பாபநாசம் சேர்வலாறு, மணிமுத்தாறு. கடானநதி இராமநதி ஆகிய அணைகளில் உள்ள தண்ணீர் மட்டத்தை சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர்கள் ஏன் குறைக்க தவறினார்கள்? என்பதையும் அவர்களது உயரதிகாரிகளான உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், மற்றும் தலைமைப் பொறியாளர்கள் ஏன் கீழ்மட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடவில்லை என்பதையும் ஒரு உயர்மட்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். தவறு செய்த அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தி அவர்களை தண்டிப்பதுடன் இனி வருங்காலங்களில் இது போன்ற வெள்ள சேதங்கள் தென் மாவட்டங்களில் ஏற்படாதவாறு நெறிமுறைகளை உருவாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கை மனுவினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழக நீர்வளத்துறை அமைச்சர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.