May 29, 2024

Seithi Saral

Tamil News Channel

விஜயகாந்த் வாழ்க்கையில் திருவனந்தபுரம்

1 min read

Thiruvananthapuram in the life of Vijayakanth

29.12.2023
தமிழக திரைப்படத்துறையில் புரட்சிக்கலைஞர் என்று அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் நேற்று காலமானார். அவரது மறைவு அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்களையே பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது என்றே கூறலாம்.
தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பல தெருக்களில் விஜயகாந்தின் படத்தை வைத்து மக்கள் அஞ்சலி செலுத்துவதே அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. நடிகர் விஜயகாந்த் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இதனால் சினிமா துறைக்கு வந்து சம்பாதித்தபோது, ஏழை எளியோருக்கும், கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கும் ஏராளமான உதவிகளை செய்தார்.
நடிகர் விஜயகாந்த் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு பல வேலைகளை செய்திருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான ஊர் அவர் பிறந்த மதுரையாகும். அதேபோன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரமும் விஜயகாந்துக்கு மிகவும் பிடித்த நகரம் என்று அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்கு காரணம் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக திருவனந்தபுரத்தில் நடிகர் விஜயகாந்த் வேலை பார்த்திருக்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜயகாந்த் தந்தையின் அண்ணன் திருவனந்தபுரம் சாலா மார்க்கெட்டில் அரிசி வியாபாரம் செய்திருக்கிறார். இதனால் அவருடன் விஜயகாந்த் திருவனந்தபுரத்துக்கு அடிக்கடி சென்றிருக்கிறார். அப்போது அவர் திருவனந்தபுரத்தின் அனைத்து இடங்களுக்கும் சென்றார்.
இதனால் திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து இடங்களையும் விஜயகாந்த் தெரிந்து வைத்திருக்கிறார். அப்போது அவர் 1970-களில் புகழ்பெற்ற ஷாம்பூ நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்தார். அது அவருக்கு திருவனந்தபுரம் நகருடனான தொடர்பை மேலும் அதிகரித்தது.

விஜயகாந்துக்கு திருவனந்தபுரம் நகரத்துடனான தொடர்பு வலுவானதாக மாற மற்றொரு சம்பவம் அரங்கேறியது. அவரது நெருங்கிய நண்பரான சுந்தர்ராஜின் சகோதரி முத்துலட்சுமியின் திருமணம் 45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதற்காக விஜயகாந்த் அங்கு சென்றார்.

நண்பரின் சகோதரி முத்துலட்சுமிக்கு, கண்ணன் என்பவருடன் திருமணம் நடந்தது. கண்ணன் திருவனந்தபுரத்தில் நகைக்கடை நடத்தி வந்தார். திருமணத்திற்கு பிறகு, விஜயகாந்துக்குக்கு கண்ணணுடன் நட்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கண்ணனை பார்க்க திருவனந்தபுரத்துக்கு விஜயகாந்த் அடிக்கடி செல்லத் தொடங்கினார்.
அவ்வாறு வரும்போது கண்ணனுடனேயே தங்கி விடுவார். அவரின் மூலமாக நடிகர் விஜயகாந்துக்கு திருவனந்தபுரத்தில் ஏராளமான நண்பர்கள் கிடைத்தனர். அவர்கள் அனைவரும் சந்திக்கும் இடமாக கண்ணனின் நகைக்கடை திகழ்ந்தது.

இந்த நிலையில் நகைக்கடை நடத்தி வந்த கண்ணன் இறந்துவிட்டார். இதையடுத்து அவர் நடத்தி வந்த நகைக்கடையை நடிகர் விஜயகாந்த் 7 லட்சம் ரூபாய்க்கு வாங்கி சிறிது காலம் நடத்தி வந்தார். பின்பு அந்த கடையை விற்றுவிட்டு மதுரைக்கு சென்ற விஜயகாந்த், தனது தந்தை நடத்திவந்த அரிசி ஆலையை கவனித்து வந்தார்.

அதன்பிறகு சினிமா துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் நடிகர் விஜயகாந்த் சென்னையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தபோதிலும் தனது நண்பர்களை பார்ப்பதற்காக அடிக்கடி திருவனந்தபுரத்துக்கு சென்று வந்திருக்கிறார்.

அவ்வாறு செல்லும்போதெல்லாம் அருங்காட்சியகம், மிருகக்காட்சி சாலை, பத்மநாபசுவாமி கோவில், கோவளம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதை நடிகர் விஜயகாந்த் வழக்கமாக வைத்திருந்தார். நடிகர் விஜயகாந்தின் நண்பர்கள் பலர் திருவனந்தபுரத்தில் உள்ளனர்.

நடிகர் விஜயகாந்த் திருவனந்தபுரம் நகருடன் வைத்திருந்த தொடர்பு காரணமாக, அவருக்கு அங்குள்ள மக்கள் மத்தியில் அவருக்கு தனி அன்பு கிடைக்க வழிவகை செய்தது. இதனால் நடிகர் விஜயகாந்த்தின் நினைவு திருவனந்தபுரம் நகரில் நீண்டகாலம் இருக்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.