May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

பாஜக பிரமுகர் கொலையில் 15 பேருக்கு தூக்கு

1 min read

15 people hanged in BJP leader’s murder

30.1.2024
கேரள மாநிலம் ஆலப்புழா வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் சீனிவாஸ். வக்கீலான இவர் பாரதிய ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி வீட்டில் இருந்த ரஞ்சித் சீனிவாசை, அவரது மனைவி மற்றும் தாய்-மகள் முன்னிலையில் ஒரு கும்பல் வீடு புகுந்து கொடூரமாக வெட்டி கொலை செய்தது. ரஞ்சித் சீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்புகளை சேர்ந்த நிஜாம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், அப்துல்கலாம் என்ற சலாம், அப்துல் கலாம், சபரூதின், மன்சாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நஸீர், ஜாஹீர்உசேன், ஷாஜி, ஷெர்னாஸ் அஷரப் ஆகிய 15 பேருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை, கூட்டுசதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் சேர்க்கப்பட்ட முதல் 8 பேர் கொலையில் நேரடியாக ஈடுபட்டதும், மற்றவர்களுக்கு கொலை சதியில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

அதனடிப்படையில் 15 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் குற்றவாளிகள் என மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.
குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்பு அனைவரின் மத்தியிலும் எழுந்தது. இதனால் மாவேலிக்கரை கோர்ட்டில் இன்று பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அதன்படி குற்றவாளி 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்திருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.