முதல்முறையாக உரையை படிக்காமல் புறக்கணித்த கவர்னர்
1 min readFor the first time, the Governor ignored the speech without reading it
12.2.2024
தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார்
தமிழக சட்டசபையில் உரையாற்றுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி காலை 10 மணிக்கு அவைக்கு வந்தார். அவர் வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பேச தொடங்கினார்.
மதிப்பிற்குரிய சட்டப்பேரவை தலைவர் அவர்களே! மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே, மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை அலுவலர்களே, நண்பர்களே, தமிழக சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறிவிட்டு உரையை வாசிக்க தொடங்கினார்.
அப்போது அவர் ஒரு திருக்குறளை வாசித்துவிட்டு சில கருத்துக்களை பேச தொடங்கினார். இந்த அவையில் தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் இசைக்க வேண்டும். அதை கடைபிடிக்கவில்லை. கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் ஏற்புடையதாக இல்லை.
எனவே உரையை படிக்க விரும்பவில்லை. அரசு தயாரித்த உரையில் பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும் உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்க முடியவில்லை.
இவ்வாறு கூறிவிட்டு தொடர்ந்து அரசின் உரையை வாசிக்காமல் வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் நன்றி என்று கூறி தனது உரையை 4 நிமிடங்களுக்குள் முடித்துக்கொண்டார்.
அரசின் உரையை கவர்னர் முழுமையாக படிக்காமல் புறக்கணித்து அவையில் அமர்ந்த சம்பவம் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக கவர்னர் அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல் புறக்கணித்து அவையில் அமர்ந்து இருந்தது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.