May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

குடியுரிமை திருத்த சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது: கவர்னர் உரையில் தகவல்

1 min read

Citizenship Amendment Act will not be implemented in Tamil Nadu: Information in Governor’s speech

12.2.2024
தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் புறக்கணித்தார். இதையடுத்து அந்த உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள்தொகையில் 6 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ள நமது மாநிலம் இந்தியாவின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்கினை அளிக்கிறது.

2022-2023-ம் ஆண்டில் 7.2 சதவீத நிலையான வளர்ச்சி வீதத்தை விஞ்சி நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் சராசரி பண வீக்கத்தை பொருத்தவரை 2022-23-ம் ஆண்டிலும் நாட்டின் 6.65 சதவீத பண வீக்கத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97 சதவீதமாக உள்ளது. இந்திய நாட்டை விட தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி அடைவதோடு அதே கால கட்டத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் நமது மாநிலம் திறம் பட செயல்பட்டு வருவதை இது மெய்ப்பிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய தலைமையின் கீழ் இந்த அரசின் அயராத முயற்சியின் விளைவாக குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியினை கண்டுள்ளது.

மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால் 2021-2022-ல் 4-ம் இடத்தில் இருந்த நமது மாநிலம் 2022-2023-ம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.

சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு நடத்த காட்டியது பெருமை அளிக்கிறது. இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது. ஜி.எஸ்.டி. காரணமாக தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணிகளுக்கு உறுதி அளித்தபடி மத்திய அரசு நிதி அளிக்கவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

மக்களுடன் முதல்வர் திட்டத்தால் 2.40 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகிறது. புயல் பாதிப்பு நிவாரணத்துக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. பண வீக்கத்தை கட்டுப்படுத்தி விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களின் வருமான ஆதாரம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை ரூ.24,926 கோடி சுய உதவிக்குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டு உள்ளது.

அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் முகவரியாக தமிழகம் உள்ளது. மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கி நிதி உதவி வழங்க வேண்டும். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான முழு செலவினமும் தமிழக அரசின் நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது.
மகளிருக்கு மாதம் ரூ.1000 என்ற தேர்தல் வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவுத் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியாகும்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைபடுத்த அனுமதிப்பதில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
மத்திய அரசு அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக எடுக்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் திறன் அதிகரித்துள்ளது.

நாட்டிற்கே முன்னோடியாக காலை சிற்றுண்டி திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை சிற்றுண்டி திட்டம் 16.85 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

முதலமைச்சரின் கனவுத்திட்டமாக காலை சிற்றுண்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சிறுபான்மையினர், மீனவர்களை காப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது நாட்டிற்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது. 5.59 லட்சம் ஏக்கராக குறுவை சாகுபடியை உயர்த்தி தமிழக வேளாண் துறை சாதனை படைத்துள்ளது.

வரலாற்றிலேயே முதல்முறையாக பால் கொள்முதல் விலை அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொடர் முயற்சியால் இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும். 3 லட்சம் பெண்களை கொண்டு புதிதாக 27 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 அளிக்கப்பட்டு வருகிறது.

2.17 லட்சம் பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தால் பலன் அடைந்துள்ளனர்.

மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். இல்லம் தேடி கல்வித்திட்டம் 1.65 லட்சம் மையங்களில் நடைபெறுகிறது. இதன் மூலம் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4671 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. சரக்கு சேவை வரிக்கான இழப்பீட்டை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும்.

மருத்துவ சுற்றுலாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. விளையாட்டை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பரவலான வளர்ச்சியை கொண்டு வர அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 24.86 லட்சம் மாணவர்கள் இல்லம் தேடி கல்வி திட்டத்தால் பயன் அடைந்து வருகின்றனர்.

3 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூ.18,228 கோடியில் ஜல்ஜீவன் திட்டம் மூலம் 1 கோடிக்கும் மேலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.294 கோடியில் திட்டம் உள்ளது.

ரூ.76 கோடியில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு மூலம் குறுவை சாகுபடி பரப்பளவு 5.59 லட்சம் ஏக்கராக உயர்த்தி தமிழக வேளாண் துறை சாதனை படைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.