November 10, 2024

Seithi Saral

Tamil News Channel

ரயில் விபத்தை தடுத்த செங்கோட்டை தம்பதிக்கு ரயில்வே கோட்ட மேலாளர் பாராட்டு

1 min read

Madurai Division Railway Manager praises Sengottai couple for preventing train accident

2.3.2024
தமிழக கேரள எலலையான புளியரைப் பகுதியில் நள்ளிரவில் தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்த நிலையில் அந்த வழியாக வந்த ரயிலை விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தம்பதியை மத்திய ரயில்வே துறை அமைச்சரின் உத்தரவுபடி மதுரை கோட்ட மேலாளர் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த புளியரை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 01.00 மணிக்கு 20 மீட்டர் உயர மலைப்பாதையில் பிளைவுட் பலகைகள் ஏற்றப்பட்ட லாரி ஒன்று பயணித்தது கொண்டிருந்தது. திடீரென அந்த லாரி மலை பாதையில் இருந்து கவிழ்ந்து உருண்டு அருகில் உள்ள ரயில் பாதையில் விழுந்தது. லாரி விழுந்த பலத்த சத்தத்தை கேட்ட அருகில் வசித்த தம்பதி சண்முகையா மற்றும் வடக்குத்தியாள் இருவரும் வெளியே வந்து விபத்தை பார்த்தனர். அந்த நேரத்தில் திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி ரயில் வர வேண்டிய நேரம் என்பதை உணர்ந்தனர். உடனே இருவரும் டார்ச் லைட்டுகளை ஒளிரச் செய்து அசைத்து கொண்டே ரயிலை நிறுத்த பகவதிபுரம் நோக்கி ரயில் பாதையில் ஓடினர். ஆனால் அன்று திருநெல்வேலி – மேலப்பாளையம் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிக்காக பாலருவி ரயில் ரத்து செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அந்த நேரத்தில் புனலூர் நோக்கி திருவனந்தபுரத்திற்கு ஆட்டுக்கால் பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ரயில் இயக்க ஒரு காலி ரயில் பெட்டி தொடர் வந்து கொண்டிருந்தது. இவர்கள் அசைக்கும் விளக்கொளியை பார்த்து காலி பெட்டி தொடர் ரயிலை நிறுத்தினார் ரயிலின் லோகோ பைலட் மோசஸ். விபத்து நடந்த இடத்திலிருந்து 100 மீட்டருக்கு முன்பாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அந்த தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டும்படி மதுரை கோட்ட ரயில்வே மேலாளருக்கு உத்தரவிட்டார். தம்பதியர் சென்னை சென்று விட்டதால், கோட்ட ரயில்வே மேலாளர் அந்த தம்பதியை உடனடியாக சந்திக்க முடியவில்லை. எனவே வெள்ளிக்கிழமை (மார்ச் 1) அன்று கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா புளியரையில் உள்ள வீட்டில் அந்த தம்பதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பகவதிபுரம் ரயில் நிலையத்தில் நடந்த பாராட்டு விழாவில் தம்பதியருக்கு பாராட்டு சான்றிதழும் ரொக்க பரிசும் வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில் முது நிலைக் கோட்ட பொறியாளர் எம். பிரவீனா, கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த தம்பதியர் ஏற்கனவே காட்டாற்று வெள்ளம் வந்து ரயில் பாதை அரித்துச் சென்றபோதும், இதேபோல லாரி ஒன்று ரயில் பாதையில் விழுந்த போதும் ரயில்வே துறைக்கு உதவி பரிந்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.