November 5, 2024

Seithi Saral

Tamil News Channel

வயநாடு தொகுதியில் 3 முக்கிய தலைவர்கள் போட்டி

1 min read

3 main leaders contest in Wayanad constituency

26/3/2024
பாராளுமன்ற தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்று கேரள மாநிலம் வயநாடு. இங்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் களம் இறங்குகிறார். கடந்த முறை அமேதி மற்றும் வயநாட்டில் போட்டியிட்ட அவர், அமேதியில் தோல்வியடைந்தார். அதே நேரம் வயநாட்டில் வெற்றி பெற்றார். எனவே வருகிற தேர்தலிலும் அவர் வயநாட்டில் போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்தது.

இதனை தொடர்ந்து அவரது வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியினர் தற்போதே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல்காந்தி பாரத் ஜோடா யாத்திரை முடிந்ததும் வயநாடு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இதுவரை வரவில்லை. இருப்பினும் வேட்பு மனு தாக்கலுக்காக அவர் விரைவில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகையை பெரிய நிகழ்வாக மாற்ற காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கேரளாவில் 2-ம் கட்ட தேர்தலான ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

ராகுல்காந்தியை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் கம்யூனிஸ்டு வேட்பாளராக ஆனிராஜா களமிறக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் கேரளாவில் காங்கிரசும் கம்யூனிஸ்டும் தனித்தனியாக எதிர்த்து களமிறங்குகின்றன. ஆனிராஜா ஏற்கனவே தொகுதி முழுவதும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் களம் இறங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கேரள மாநில பா.ஜனதா தலைவர் சுரேந்திரன் களம் இறக்கப்பட்டு உள்ளார்.

அவர் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஆரம்பத்திலேயே கூறி வந்த நிலையில் திடீரென வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், வயநாட்டில் ராகுலை வீழ்த்த வலுவான வேட்பாளரை களமிறக்க கட்சி திட்டமிட்டதால், தன்னை போட்டியிட வலியுறுத்தியதாகவும் அதனை ஏற்று களம் இறங்குவதாகவும் தெரிவித்தார். கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு என்ன முடிவு கிடைத்ததோ, அது இந்த தேர்தலில் வயநாட்டிலும் கிடைக்கும். இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்கள் ஏன் ஒரே தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்று மக்கள் தற்போதே கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர். இது வாக்குப்பதிவின் போது நிச்சயம் வெளிப்படும். இன்று மாலை வயநாட்டில் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்க உள்ளேன் என்றும் அவர் கூறினார்.

கேரளாவில் 3 முக்கிய தலைவர்கள் களம் இறங்கி உள்ளதால் வயநாடு தொகுதி எதிர்பார்க்கப்படும் முக்கிய வி.ஐ.பி. தொகுதியாக மாறி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.