இறுதி வேட்பாளர் பட்டியல்: தமிழகத்தில் 39 தொகுதிகளில் 950 பேர் போட்டி
1 min readFinal candidate list: 950 candidates in 39 constituencies in Tamil Nadu
30/3/2024
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் மொத்தமாக 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், மார்ச் 20ல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 27-ம் தேதி முடிந்தது. தொடர்ந்து மார்ச் 28-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றன. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில் தொகுதிவாரியாக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. எனவே 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும் 76 பெண்களும் போட்டியிடுகின்றனர்.
அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். வட சென்னையில் 35 வேட்பாளர்களும் தென் சென்னையில் 41 வேட்பாளர்களும் மத்திய சென்னையில் 31 பேர் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். திருவள்ளூர் மக்களவை தொகுதியில் 14 வேட்பாளர்களும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் 31 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மதுரையில் 21 வேட்பாளர்களும் கோயம்புத்தூரில் 37 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் அவர் உள்பட 25 பேர் போட்டியிடுகின்றனர்.