May 1, 2024

Seithi Saral

Tamil News Channel

ரூ.4 கோடி வழக்கு: நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

1 min read

Rs 4 crore confiscation case: Election Commission ordered to take appropriate action against Nayanar Nagendran

18.4.2024
சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ந்தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுசென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் என்றும் வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
இந்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதையடுத்து நேரில் வந்து ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். இதனை தொடர்ந்து, நயினார் நாகேந்திரனின் பணம்தான் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக நெல்லை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,”காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருந்த ரூ.28 லட்சத்தை நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வீட்டில் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல, நெல்லை தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையில் இருந்து நெல்லை வரும் ரெயிலில் ரூ.4 கோடி கடத்தி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் தாம்பரம் போலீசார் ரெயிலை மறித்து, பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
எனவே, இருவரையும் நெல்லை தொகுதி வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கும் கடந்த 9-ந்தேதி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இதுகுறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. இருதரப்புவாதங்களை கேட்ட பின்னர், ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்புடைய நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.