கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- அமைச்சர் தகவல்
1 min read
There is no harm in Tamil Nadu due to Govishield vaccine – Minister informed
12.5.2024
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க நிர்வாகிகள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் முதலமைச்சர் மா.சுப்பிரமணியன், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செவிலியர்களுக்கு செய்துள்ள சாதனைகளை நினைவு கூர்ந்தார். அவர் கூறியதாவது:-
1912 தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள். மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 10 ஆயிரத்து 969 பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை படிப்படியாக உயர்த்தி ரூ.5,500 ஆக வழங்கப்படுகிறது.
செவிலியர்களுக்கான பணியிட மாற்றம், கலந்தாய்வில் நீண்ட நாட்களாக குழப்பம் நிலவியது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 9 ஆயிரத்து 535 செவிலியர்கள் கலந்தாய்வு மூலம் அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் பெற்றுள்ளார்கள்.
2400-க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் எம்.ஆர்.பி. மூலம் வெளிப்படை தன்மையுடன் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
செவிலியர் சங்கத்தினர் சிறந்த செவிலியர்களை தேர்வு செய்து விருது வழங்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்டவுடன் தேர்வு செய்யப்பட்ட 19 செவிலியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்குவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோயம்பேட்டில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு ஏதேனும் உண்டா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-
ரத்தம் உறைதல் ஏற்பட்ட மாதிரி எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக புகார் ஏதும் இல்லை. பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்குதான் எந்த பாதிப்புமே வரும். எனவே நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் உடற் பயிற்சி, உணவு முறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.