குரூப்-4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
1 min readGroup-4 Exam Hall Ticket Release
27.5.2024
குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி வெளியிட்டது
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக டி.என்.பி.எஸ்.சி. நடத்தக்கூடிய தேர்வுகளில் அதிகமானோர் விண்ணப்பிக்கக்கூடிய தேர்வாக குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கும் தேர்வர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பித்தனர்.
விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் இருந்த நிலையில், அதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி, கடந்த மாதம் 28-ந் தேதியுடன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது. அதாவது ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகின்றனர். விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வு ஜூன் 9-ந் தேதி (அடுத்த மாதம்) நடக்க இருக்கிறது.
இந்த நிலையில், குரூப்- 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 01/2024, நாள் 30.01.2024- இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (தொகுதி-4 பணிகள்)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறி வகை (OMR முறை) தேர்வு (09.06.2024) முற்பகல் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.