திருப்பத்தூர்: மர்ம பொருள் விழுந்து 5 அடி ஆழத்திற்கு பள்ளம்
1 min readTirupattur: Mysterious object fell and created a 5 feet deep hole
27/5/2024
திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலத்தில் மர்ம பொருள் விழுந்து 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் அருகே ராஜி என்பவருடைய நிலத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மர்ம பொருள் ஒன்று விழுந்துள்ளது. அதன் காரணமாக சுமார் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் உருவாகியுள்ளது.
இதை அந்த பகுதியைச் சேர்ந்த திருமலை என்பவர் பார்த்துள்ளார். ஆனால் ஏதோ சாதாரண பள்ளம் என்று நினைத்து விட்டுவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் மீண்டும் அதே இடத்திற்கு சென்ற திருமலை, அந்தப் பள்ளத்தை பார்க்கும்போது அதிலிருந்து அதிக வெப்ப அனல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் அவர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பள்ளத்தின் முன்பு குவிந்த மக்கள், அந்த மர்ம பொருள் என்னவென்று தெரியாமல் பீதி அடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், பள்ளத்தை சுற்றி வேலி போட்டு பாதுகாப்பாக வைக்க கிராம நிர்வாக அலுவலருக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கலெக்டர் அறிவுறுத்தினார்.