நெல்லை தீபக் ராஜா உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
1 min readNellai Deepak Raja’s body handed over to relatives
27.5.2024
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் பகுதியை சோ்ந்தவர் சிவகுருமுத்துசாமி மகன் தீபக்ராஜா (வயது 30). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் அவரை ரவுடி பட்டியலில் சேர்த்து போலீசார் கண்காணித்து வந்தனர்.
இவர் கடந்த 20-ந் தேதி தனது வருங்கால மனைவி மற்றும் அவரின் நண்பர்களுடன் நெல்லை- திருச்செந்தூர் சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த கும்பல் கண்இமைக்கும் நேரத்தில் தீபக்ராஜாவை வெட்டிக்கொலை செய்தனர்.
இதனையடுத்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையே இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாமல் உடலை வாங்கப்போவதில்லை என கூறி தீபக் ராஜாவின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் கொலை வழக்கோடு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்ய முயன்ற போது அதில் நவீன் மற்றும் முருகன் ஆகிய இருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். அப்போது இருவருக்கு கை, கால்களில் அடிபட்டுள்ளது. இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் சிறையில் உள்ளனர். மீதமுள்ள 4 பேரில் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து 7 நாட்களுக்கு பிறகு தீபக் ராஜாவின் உடலை பெற்று கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து வைக்கப்பட்டுள்ள தீபக் ராஜா உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.
தீபக்ராஜா உடலை ஊர்வலமாக வாகைகுளத்திற்கு எடுத்து செல்ல உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால், நெல்லை மாநகரை சுற்றி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய சந்திப்புகள், மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.