ஜெயக்குமார் மரண வழக்கு: 32 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
1 min readJayakumar death case: CPCID for 32 people. Police were summoned
27.5.2024
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கரைசுத்துபுதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். கட்டிட காண்டிராக்டராக தொழில் செய்து வந்த இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த 4-ந் தேதி தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. தொடர்ந்து கரைசுத்துபுதூருக்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார், அங்கு ஜெயக்குமார் தனசிங் இறந்து கிடந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர். அவருடைய உறவினர்கள் உள்ளிட்டவர்களிடமும் விசாரித்தனர்.
அதனை தொடர்ந்து ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின் மற்றும் மகள் கேத்தரின் ஆகியோரை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக 32 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த 32 பேருக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி 2 பேரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்து உள்ளது.