லஞ்ச ஒழிப்பு சோதனை: கொட்டாரம் சார்பதிவாளர், அலுவலக உதவியாளர் மீது வழக்குப்பதிவு
1 min readAnti-bribery probe: Kottaram registrar, office assistant booked
31.5.2024
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு லஞ்சம் வாங்கப்படுவதாக புகார்கள் வந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜான் பெஞ்சமின், சிவசங்கரி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இரவு 9 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்த சார்பதிவாளர் பொறுப்பு அப்ரோஸ் (வயது 32) என்பவரை பிடித்து அவரிடம் சோதனை செய்தபோது அவரது பேண்ட் பாக்கெட்டில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த அலுவலக உதவியாளர் மோகன் பாபுவிடம் இருந்தும் ரூ.1000 பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருவரிடமும் சுமார் 3½ மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்ரோஸ் செல்போனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பல தகவல்கள் சிக்கி உள்ளது. மேலும் 2 ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். இதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சார்பதிவாளர் பொறுப்பு அப்ரோஸ், உதவியாளர் மோகன் பாபு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்ரோஸ் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போது நாகர்கோவிலில் தங்கி பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் இருந்த பிறகும் பொறுப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டு பத்திரப்பதிவு நடைபெற்றது ஏன் என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளர் இருக்கும்போது பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படமாட்டாது.
அதனால் கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு பத்திரப்பதிவு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.