பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு முகாம்
1 min read
Aadhaar enrollment camp for students on the first day of opening of schools
31.5.2024
பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு ஆதாா் பதிவு முகாம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறைச் செயலா் குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பள்ளிகளில் மதிய உணவு, விலையில்லா பாடப் புத்தகங்கள், பேருந்து பயண அட்டை மற்றும் மிதிவண்டிகள் போன்ற விலையில்லா நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மாணவா்களின் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன.
மாணவா்களுக்கு அளிக்கப்படும் இந்த நலத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித் தொகைகள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதாா் எண் அவசியமாகிறது.
பயிலும் பள்ளிலேயே ஆதாா் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் அப்பள்ளியிலேயே ஆதாா் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதாா் எண் புதுப்பித்தல் தொடா்பான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதாா் பதிவுக் கருவிகளைக் கொள்முதல் செய்து தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் ஒப்படைத்து உள்ளது.
தமிழ்நாடு மின்னணு நிறுவனம், ஆதாா் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதாா் தரவு உள்ளீட்டாளா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கு பயிற்சியை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதாா் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் ‘பயிலும் பள்ளியிலேயே ஆதாா் பதிவு’ என்ற சிறப்பு முன்னெடுப்பானது, வரும் கல்வி ஆண்டின் பள்ளி தொடக்க நாளான ஜூன் 6-ந்தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களிலும் முழு வீச்சில் செயல்படவுள்ளது. இந்நிகழ்வை அமைச்சா்கள், பாராளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோா் முன்னிலையில் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
—