பாவூர்சத்திரம் பகுதியில் கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க கோரிக்கை
1 min read
Request for diversion of heavy vehicles in Pavoorchatram area
7/5/2024
தென்காசி மாவட்டம்,
பாவூர்சத்திரம் பகுதியில் கிராமப்புற சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்களாக விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அதனை மாற்றுப்பாதையில் திருப்பி விட வேண்டும் என கிராமப்புற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, திப்பணம்பட்டி, மலையராமபுரம் ஆரியங்காவூர், சுப்பையாபுரம், கல்லூரணி, ராமநாதபுரம்,சிவநாடானூர் ஊர் பொதுமக்கள் சார்பில் திப்பணம்பட்டி சமூக ஆர்வலர் வேல்முருகன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது.
இதில் பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பால பணி நடைபெற்று வருவதால், கடந்த பல மாதங்களாக தென்காசி செல்லும் அனைத்து வாகனங்களும் பாவூர்சத்திரத்திரம் கடையம் சாலையில் மலையராம புரம்,திப்பணம்பட்டி ஆரியங்காவூர், கல்லூரணி வழியாக மாற்றுப்பாதையில் செல்வவிநாயகர்புரம் சென்று தென்காசி 4 வழிச்சாலையில் செல்கின்றன.இந்த மாற்றுப் பாதையானது கிராமப்புற சாலை என்பதால், குறுகலான சாலையாக அமைந்துள்ளது. இந்த கிராமப்புறச்சாலை வழியாக தான் தென்காசிக்கு செல்லும் அனைத்து பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் தினமும் வந்து சென்று கொண்டு இருக்கின்றன.
மேலும்பல ஆயிரம் டன் கணக்கான லோடுகளை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலையும் சேதமடைந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கிராமங்களில் மெயின் சாலைகளுக்கு அருகில் தான் பல வீடுகள் இருக்கின்றன. வீடுகளில் இருந்து குழந்தைகள் வெளியே வரும் போது , இந்த கனரக வாகனங்களால் குழந்தைகளின் உயிர்களுக்கும் அச்சுற்றுத்தலாக உள்ளது.
மேலும் அந்த கனரக வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை மற்றும் சாலையில் புழுதிகள் உருவாகி காற்று மாசும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், மாணவர்கள் இந்த சாலை வழியாகத்தான் அருகில் உள்ள ஊர்களுக்கு பள்ளிகளுக்கும் மாலை நேர வகுப்புகளுக்கும் சென்று வருவார்கள். எனவே, மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் மற்றும் மாணவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். எனவே இந்த கனரக வாகனங்களை தென்காசி செல்வதற்கு மாற்றுப்பாதையில் திருப்பி விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.