தென்காசியில் 9-ந்தேதி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-4 பணிகளுக்கான எழுத்துத்தேர்வு
1 min read
Written Test for Integrated Civil Works Module-4 Jobs in Tenkasi
7.5.2024
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 4 பணிகளுக்கான எழுத்துத்தேர்வு 09.06.2024 அன்று முற்பகல் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ கே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி – IV பணிகளுக்கான எழுத்துத்தேர்வு 09.06.2024 அன்று முற்பகல் நடைபெறவுள்ளது. மேற்படி தேர்வானது தென்காசி. செங்கோட்டை, ஆலங்குளம், வீரகேரளம்புதூர், கடையநல்லூர், சிவகிரி. சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய 8 வட்டங்களில் அமைந்துள்ள 231 தேர்வு மையங்களில் 56385 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வு எழுதுவோர் தங்களின் தேர்வு மையங்களை கண்டறிந்து தேர்வு அறைக்குள் செல்வதற்கு ஏதுவாக முன் கூட்டியே தங்களின் தேர்வு மையங்களுக்கு வருகை புரிய கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். தேர்வு நடைபெறும் தினத்தன்று சரியாக காலை 09.00 மணி வரை மட்டுமே தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்கள். காலை 09.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் செல்ல எக்காரணம் கொண்டும் அனுமதியில்லை.
மேலும், தேர்வு மையத்திற்குள் செல்போன்கள், எலக்ட்ரானிக் கைக்கடிகாரங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் எடுத்துச் செல்லக் கூடாது. தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள்
செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
தேர்வு சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து தேர்வினை சுமூகமாக நடத்திட ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு துணை ஆட்சியர் வீதம் எட்டு வட்டங்களுக்கு 8 துணை ஆட்சியர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். படைகளும் தேர்வுக்குரிய பணிகளை மேற்கொள்ள மேலும் 14 பறக்கும் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் 60 நடமாடும் குழு அலுவலர்களும், 231 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வின் நடவடிக்கைகளை பதிவு செய்திடும் பொருட்டு அனைத்து மையங்களிலும் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நாளன்று தேர்வர்கள் தேர்வு எழுத வசதியாக தேர்வு மையத்திற்கும். தேர்வு முடிந்த பின்னர் செல்வதற்கும் போதிய பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் கல்வி நிலையத்திற்கு காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேர்வுகள் தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 18004190928 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.