August 8, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆன் லைன் மோசடிக்கு வங்கி கணக்கை கொடுத்து கமிஷன் பெற்றவர் கைது

1 min read

Person arrested for providing bank account for online fraud and receiving a commission.

8.8.2026
ராமநாதபுரம் அருகே வங்கி கணக்கை கொடுத்து கமிஷன் பெற்று ஆன்லைன் மோசடி கும்பலுக்கு உதவிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மோசடியில் ஈடுபடும் கும்பல் போலீசாரிடம் இருந்து தப்பிக்க தங்கள் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாங்கி மோசடிக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இவ்வாறு பலர் மோசடி நபர்களின் பணத்தினை தங்களது வங்கி ஏ.டி.எம். மூலம் எடுத்து அவற்றை கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பும் செயலில் ஈடுபடுவது தொடர்ந்து வருகிறது. இதனை கண்டறிந்த போலீசார் இதுபோன்ற குற்றவாளிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின்பேரில் சென்னை இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் அமைந்துள்ள வங்கியில் ஒரு கணக்கில் இணைய மோசடியில் பெறப்பட்ட சட்டவிரோத பணத்தை பெற்று அதனை கிரிப்டோ கரன்சியாக மாற்றி மோசடி நபர்களுக்கு தொடர்ந்து அனுப்பி வருவதாக புகார் வந்தது.

இதுகுறித்து கேணிக்கரை போலீசார் அந்த வங்கி கணக்கிற்கான நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த வங்கி கணக்கு சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தனசேகரன் (வயது 25) என்பவருடையது என தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் தனது வங்கி கணக்கு மூலம் ஆன்லைன் மோசடி பணத்தை பெற்று அதனை கிரிப்டோ கரன்சியாக மாற்றி கொடுத்து கமிஷன் பெற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்காக பெருந்தொகையை கமிஷனாக பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தனசேகரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மோசடி நபர்களின் குற்றச்செயலுக்கு தனது வங்கி கணக்கை பயன்படுத்தி கமிஷன் பெற்றதும், மோசடி பணத்தை குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் கணக்கிற்கு கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்புவதையும் வாடிக்கையாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட தனசேகரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நிலையில் வருகிற 19-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *