குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம்- குளிக்க தடை
1 min readFlooding at all waterfalls in Koortalam- Bathing prohibited
29.7.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும். இந்த காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை அடிக்கும். குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்.
குற்றாலத்தில் ஏற்படும் இதமான குளிர்ந்த சூழ்நிலையை அனுபவிக்கவும், மெல்லிய சாரல் மலையில் நனையவும், அருவிகளில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழவும் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் வந்து குவிந்து விடுவார்கள். அதன்படி குற்றாலத்தில் சீசன் களைகட்டி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.
இந்நிலையில் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழைனால் நேற்று முன்தினம் மாலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இரவில் தண்ணீர் வரத்து அதிகரித்து அதுவே வெள்ளப்பெருக்காக மாறியது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார தடை விதித்தனர்.
இந்நிலையில் இன்று காலையிலும் மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து குறையவில்லை இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதோடு போலீசார் அனைத்து அருவிப்பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் குற்றாலம் வருகை தந்துள்ள வெளியூர் பயணிகள் கடந்த இரண்டு நாட்களாக அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அருவிகளுக்கு வரும் தண்ணீரின் வரத்து சற்று குறைந்து விட்டால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்