20 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன்
1 min readKing of Kalyana who married 20 women
29/7/2024
மராட்டியம் மாநிலம் தானே மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியில் வசித்து வரும் 38 வயது விவாகரத்தான பெண் ஆன்லைன் திருமண தகவல் தளம் வழியாக திருமணத்துக்கு வரன் தேடிவந்தார். அவருக்கு கல்யாண் பகுதியை சேர்ந்த பெரோஸ் சேக் (வயது43) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது பெரோஸ் சேக் தான் விமானியாக பணிபுரிந்து வருவதாகவும், மனைவி இறந்துவிட்டதால் மகள், அத்தையுடன் கத்தாரில் வசித்து வருவதாக கூறினார். மேலும் அப்பெண்ணிடம் திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார்.
இதை நம்பிய அப்பெண் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெரோஸ் சேக்கை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு பெரோஸ் சேக் பெண்ணின் வீட்டில் வசித்து வந்தார். திருமணத்துக்காக பெண் வீட்டார் அவருக்கு ரூ.6½ லட்சம் மதிப்பிலான லேப்-டாப், கார் வாங்கி கொடுத்து உள்ளனர்.
இந்தநிலையில் நவம்பர் மாதம் திடீரென பெரோஸ் சேக் மாயமானார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எங்கு தேடியும் பெண்ணால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பெண்ணுக்கு பெரோஸ் சேக் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர் நாலச்சோப்ரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர்.
ழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் விரக்தி அடைந்த அப்பெண் பெரோஸ் சேக்கை அவரே பிடிக்க திட்டம் போட்டார். இதற்காக அவர் ஆன்லைன் திருமண தகவல் தளத்தில் போலி கணக்கு ஒன்றை தொடங்கினார். அதன் மூலம் பெரோஸ் சேக்கை பிடித்துவிடலாம் என அப்பெண் நினைத்தார். பெண் நினைத்தது போலவே அவரது வலையில் பெரோஸ் சேக் விழுந்தார். வேறு ஒரு பெண் போல பேசி பெரோஸ் சேக்கின் புதிய செல்போன் எண்ணை வாங்கினார். இதன் மூலம் அவர் கல்யாண் பகுதியில் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து அப்பெண் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக கல்யாண் விரைந்த போலீசார் பெரோஸ் சேக்கை கைது செய்தனர். இதையடுத்து நடந்த விசாரணையில் கல்யாண மன்னன் பெரோஸ் சேக் 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பரபரப்பு தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பெரோஸ் சேக் வெவ்வேறு பெயர்களில் ஆன்லைன் திருமண தகவல் தளத்தில் கணக்கு தொடங்குவார். அதன் மூலம் விவாகரத்தான, விதவை பெண்களை தொடர்பு கொண்டு பேசுவார். அவர்களை தனது வலையில் வீழ்த்தி திருமணம் செய்வார். பின்னர் பெண் வீட்டாரிடம் திருமணத்தின் போது வாங்கிய நகை, பணம், பொருட்களுடன் தலைமறைவாகிவிடுவார். புனேயில் மட்டும் அவர் 4 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். இதுதொடர்பான வழக்குகளில் சிக்கி 6 முறை ஜெயிலுக்கும் சென்று இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து அவர் மோசடியில் ஈடுபட்டு வந்து இருக்கிறார்.
2016-ம் ஆண்டு 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது மராட்டியம் மட்டுமின்றி மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் தான் நாலச்சோப்ராவை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து சிக்கி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.