நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
1 min readNellai Municipal Corporation Mayor Candidate Official Notification
4.8.2024
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து பதவி விலகல் கடிதத்தை ஜூலை 8-ம் தேதியன்று மாநகராட்சி ஆணையாளர் தாக்ரே சுபம் ஞானதேவிடம் வழங்கினார். பின்னர் கடிதம் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மேயர் பதவி காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவிக்கப்படும் தேதியில் மேயர் தேர்தல் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார். இதையடுத்து புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் நாளை (ஆக. 5) நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அறிவித்தார்.
நாளை மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர். இதில் மேயர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நெல்லை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
நாளை நடைபெறும் மறைமுக தேர்தலில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதனை தொடர்ந்து அவர் மேயராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.