வங்காளதேசத்தில் உள்ள இந்தியர்களுக்கு வெளியில் வருவதை தவிர்க்க வலியுறுத்தல்
1 min readIndians in Bangladesh urged to refrain from going abroad
5.8.2024
வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதனிடையே, 1971ம் ஆண்டு வங்காளதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தியாகிகளின் குடும்பத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்ய வேண்டுமென கூறி கடந்த சில நாட்களுக்கு முன் அந்நாட்டில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுத்தது. இந்த நடவடிக்கையின்போது 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, வங்காளதேசத்தில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. பிரதமர் ஹேக் ஹசீனா தலைமையிலான அரசு பதவி விலகக்கோரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் முயற்சித்தபோது வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில் பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. ஷேக் ஹசீனா பதவி விலகக்கோரி போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வங்காளதேச பயணத்தை தவிர்க்கும்படி இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான தகவலை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “வங்கதேசத்தில் நிலவும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் வங்கதேசத்துக்குச் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வங்கதேசத்தில் இப்போது இருக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெளியில் செல்வதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். டாக்காவில் உள்ள இந்திய துணை தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும்படி வலியுறுத்தப்படுகிறார்கள். அவசர உதவி தேவைப்படும் நபர்கள் +8801958383679, +8801958383680, +8801937400591 எண்களை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.