புதுச்சேரி கவர்னராக கைலாசநாதன் பதவியேற்றார்
1 min readKailasanathan was sworn in as the Governor of Puducherry
7.8.2024
புதுச்சேரி கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜார்க்கண்ட் மாநில கவர்னராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, புதுவை பொறுப்பு கவர்னர் பதவி கூடுதலாக அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, புதுச்சேரியின் பொறுப்பு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், மராட்டிய மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். புதுவையின் புதிய கவர்னராக கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைலாசநாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். இதையடுத்து புதிய கவர்னர் கைலாசநாதன் நேற்று மதியம் 12 மணியளவில் புதுச்சேரிக்கு வந்தார். அவரை புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்நிலையில், இன்று கவர்னர் மாளிகையில் புதுச்சேரியின் 25வது கவர்னராக கைலாசநாதன் பதவியேற்றார். சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், புதிய கவர்னருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்ற கைலாசநாதனுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.