மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா மரணம்
1 min readFormer West Bengal Chief Minister Buddhadev Bhattacharya passes away
8.8.2024
மூத்த இடதுசாரி தலைவரும், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரியுமான புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 80. சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், சுவாசக் கோளாறு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு, அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு கொல்கத்தா அவரது இல்லத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உயிர் பிரிந்தது. அவருக்கு மீரா என்ற மனைவியும், சுசேதன் என்ற மகனும் உள்ளனர்.
முன்னதாக மேற்கு வங்காள மாநிலத்தில் 1977-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இடதுசாரிகள் (கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி) ஆட்சி செய்தனர். 1977-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்களில் இடதுசாரிகள்தான் தொடர்ச்சியாக வென்று கோட்டையாக வைத்திருந்தனர். 1977-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை மேற்கு வங்காள முதல்-மந்திரியாக இருந்தவர் ஜோதிபாசு. ஜோதிபாசுவுக்குப் பின்னர் 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 2 முறை முதல்-மந்திரியாக தொடர்ந்து பதவி வகித்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா.
பின்னர் 2011-ம் ஆண்டு முதல் இடதுசாரிகளை வீழ்த்திய மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நிலை நிறுத்தி வைத்துள்ளார். மேற்கு வங்காளத்தில் இடதுசாரி அரசின் – மார்க்சிஸ்ட் கட்சியின் கடைசி முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா. இடதுசாரி அரசியல் ஆளுமையாக திகழ்ந்த புத்ததேவ் பட்டாச்சார்யா மிக சிறந்த கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக, இலக்கிய ஆளுமையாகவும் ஜொலித்தவர்.
இந்நிலையில் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மரணத்திற்கு அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.