குற்றாலம் மெயின் அருவி பகுதியில் தீ விபத்துஇரண்டு கடைகள் எரிந்து நாசம்
1 min read
Fire incident in Courtalam main waterfall area Two shops were gutted
16.8.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிக்கு கீழ்புறம் உள்ள பகுதியில் பேரூராட்சி இடத்தில் சீசன் கால கடைகள் உள்ளது. அந்தப் பகுதியில் குற்றாலம் குடியிருப்பு பகுதியை சார்ந்த பாண்டி என்பவர் டீக்கடையும் கடையநல்லூர் முத்துகிருஷ்ணா புரம் பகுதியைச் சார்ந்த முருகன் சிப்ஸ் கடையும் வைத்துள்ளார்.
இந்நிலையில் காலையில் திடீரென சிப்ஸ் கடையின் பின்புறம் தீப்பற்றியுள்ளது. அது அருகில் உள்ள பாண்டியின் டீ கடையிலும் பரவி தீப்பற்றி எரிந்துள்ளது இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர் ஆனாலும் தீ வேகமாக பரவியது.
இது பற்றி உடனடியாக தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல றிந்த தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தென்காசி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் மற்றும் தென்காசி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரதீப் குமார் தலைமையில்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த கடையில் இருந்த கேஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
ஏற்கனவே குற்றாலத்தில் கடந்த ஆண்டு அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்ட சீசன்கால கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது அதில் 40 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது. இந்த வருடமும் அதைப்போலவே கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.