August 6, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் மெயின் அருவியில் பாறை கற்கள் விழுந்து 5 பேர் காயம்

1 min read

5 people were injured after rocks fell in the main waterfall at Courtalam

22.8.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயினருவியில் திடீரென 20 கிலோ எடையுள்ள பாறை உடைந்து விழுந்ததில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் காயமடைந்தனர்.இதனால் உடனடியாக மெயினருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அப்புறப்படுத்தப் பட்டனர்.

குற்றாலத்தில் சீசன் களைகட்டி உள்ள நிலையில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆண்கள் குளித்து கொண்டிருந்த பகுதியில் சுமார் 20 கிலோ எடையுள்ள பாறை உடைந்து விழுந்து உள்ளது. அந்தக்கல் கீழே விழுந்து சிதறியதில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 5 சுற்றுலா பயணிகளுக்கு தலை, முதுகு, உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த கடையநல்லூர் ரகுமானியாபுரத்தை சேர்ந்த அசன் அவுலியா என்பவரது மகன் உதுமான் மைதீன்(வயது 58), கேரள மாநிலம் புனலூர் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்த காசிம் என்பவரது மகன் ஜமால் (வயது 56), பாலகிருஷ்ணன் என்பவரது மகன் பிஜி(வயது 44),தென்காசி மலையான் தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரது மகன் அருண்குமார் (வயது 25), அறந்தாங்கியை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது மகன் கணேசன்(வயது 47) ஆகியோர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அருவியில் கற்கள் விழுந்ததை தொடர்ந்து சுற்றுலாப்பயணிகளின் நலன்கருதி மெயின் அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு தறையினர்.குற்றாலம் மெயின் அருவியில் விழுந்த பாறை கற்களை பார்வையிட்டனர். மேலும் மெயின் அருவிக்கு மேல் சுமார் 40 அடி உயரத்தில் ஏணி மூலம் ஏறி ஆபத்தான நிலையில் இருந்த மரக்கிளைகள் மற்றும் அதில் சிக்கியிருந்த சில பாறைகளையும் தீயணைப்பு துறையினர் அகற்றினர்.

இதில் தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் உதவி அலுவலர் தென்காசி பிரதீப் குமார், சிறப்பு நிலைய அலுவலக கணேசன் சிறப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து பிரகாஷ் பாபு, மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாதவன், வெள்ளப்பாண்டி, கார்த்திகேயன் ஆறுமுகம் ஆகியோர் ஏணி மூலம் மேலே ஏறி பாதுகாப்பாக அகற்றினர். மெயின் அருவியில் தண்ணீர் விழுந்து கொண்டிருந்த போது சுமார் 40 அடி உயரத்தில் பாறை வழுக்கு நிறைந்த இடத்திற்கு ஏறி அங்கு ஆபத்தான நிலையில் இருந்த பாறைகளையும், மரக்கிளைகளையும் அப்புறப்படுத்திய தீயணைப்புத்துறை வீரர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *