போலீசாரை ஆபாசமாக திட்டிய ஜோடிக்கு ஜாமீன் மறுப்பு
1 min readCouple denied bail for swearing at police
3.11.2024
சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த காரை எடுக்குமாறு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூறியபோது, அந்த காரில் இருந்த ஜோடி, போலீசாரை ஆபாசமாக திட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலெட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, ஜாமீன் கோரி சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலெட்சுமி ஆகியோர் சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு கடந்த மாதம் 25ம் தேதி விசாரணைக்கு வந்த போது ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காவல்துறையின் எதிர்ப்பை தொடர்ந்து, ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு மறுப்பு தெரிவித்து, ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.