நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
1 min readA person with disabilities tried to set fire to the collector’s office in Nellie
9.11.2024
பாளையங்கோட்டை செந்தில் நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 47). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான மகேஷ் இன்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தார்.
அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு மகேஷ் திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோல் பாட்டிலை திறந்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரோகிணி செல்வி தலைமையிலான போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஓடிச்சென்று மகேசிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பறித்தனர்.
பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவரது மனைவி அனிதா போலீசாரிடம் கூறியதாவது:-
நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில் நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினோம். தற்போது அந்த வீட்டின் உரிமையாளர் எந்த காரணமும் கூறாமல் வீட்டை காலி செய்யுமாறு எங்களை மிரட்டுகிறார்.
நாங்கள் அவரிடம் அவகாசம் கேட்டோம். ஆனால் அவர் அவகாசம் தர மறுப்பதோடு வீட்டின் மின் இணைப்பை தடை செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு தொந்தரவு கொடுக்கிறார். எனவே எங்களுக்கு உரிய அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அவர்களுக்கு அறிவுரை கூறிய போலீசார் இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசில் முறைப்படி புகார் மனு அளியுங்கள் என கூறி தங்களது ரோந்து வாகனத்திலேயே அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.* * *மனைவி, குழந்தைகளுடன் வந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியை மீட்டு போலீசார் விசாரணை நடத்திய காட்சி.