தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதல்-அமைச்சர் திடீர் ஆய்வு
1 min read
Deputy Chief Minister surprise inspection at Thoothukudi District Collector’s office
14/11/2024
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகின்ற நபர்கள் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகள் குறித்து பார்வையிட்டார். வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பிரிவு, சமூக பாதுகாப்புத் திட்ட பிரிவு, வட்ட வழங்கல் பிரிவுகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல்கள், மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
அரசின் பல்வேறு துறைகள் இருந்தாலும் பொதுமக்களிடம் நேரடியாக தொடர்பு கொண்ட வருவாய்த்துறையின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நீங்கள் அனைவரும் பொதுமக்களின் விண்ணப்பங்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு, சாதிச்சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள், மின்னணு குடும்ப அட்டை, பட்டா மாறுதல்கள் ஆகிய சேவைகள் விரைந்து கிடைத்திடவும், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் தகுதியான அனைத்து நபர்களுக்கும் கிடைத்திட பணிகளை மேற்கொண்டு பயனாளிகள் பயன்பெற செய்ய வேண்டும். அரசின் பல்வேறு முக்கியமான திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நீங்கள் அனைவரும் அரசிற்கும் பொதுமக்களுக்கும் பாலமாக செயல்பட்டு சேவையாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.