தென்காசியில் புத்தகத் திருவிழா நாளை துவங்குகிறது
1 min read
Tenkasi book festival starts tomorrow
14.11.2024
தென்காசியில் நாளை 15ம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கி வரும் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
தென்காசி மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து நடத்தும் பொதிகை புத்தகத் திருவிழா நாளை 15ம் தேதி தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்குகிறது. அன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை தாங்குகிறார்.
சென்னை பொது நூலக இயக்குநர் முனைவர் பொ.சங்கர் முன்னிலை வகிக்கிறார். மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் வரவேற்று பேசுகிறார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பொதிகை புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து பேசுகிறார். விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, பாராளுமன்ற உறுப்பினர்கள் தென்காசி; டாக்டர் ராணி ஸ்ரீகுமார், திருநெல்வேலி ராபர்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி எஸ்.பழனி நாடார், சங்கரன்கோவில் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார், கடையநல்லூர் செ.கிருஷ்ணமுரளி, ஆலங்குளம் பி.எச்.மனோஜ் பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சு.தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி உதயகிருஷ்ணன், மாவட்ட வன அலுவலர் இரா.முருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மைக்கேல் அந்தோனி பெர்னாண்டோ, தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஷேக் அப்துல்லா ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
எழுத்தாளர் மானசீகன் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் கு.அழகிரிசாமி என்ற தலைப்பிலும், எழுத்தாளர் ஆர்.காளிபிரசாத் மொழிபெயர்ப்புகளின் வருகையும் மாற்றங்களும் என்ற தலைப்பிலும், எழுத்தாளர் இராயகிரி சங்கர் புன்னகைக்கும் கதைசொல்லி வைக்கம் முகம்மது பஷீர் பற்றியும் பேசுகின்றனர்.
இறுதியில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் நன்றி கூறுகிறார்.
புத்தகத் திருவிழா தொடர்ந்து வரும் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.