ராஜஸ்தானில் துணை கலெக்டரை தாக்கிய சுயேச்சை வேட்பாளர் கைது
1 min read
Independent candidate arrested for assaulting deputy collector in Rajasthan
14.11.2024
ராஜஸ்தானில் தேர்தல் பணியில் இருந்த துணை கலெக்டரை சுயேச்சை வேட்பாளர் கன்னத்தில் அறைந்தார். அவரை கைது செய்ய போலீசார் முயன்ற போது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர். அதிவிரைவுப்படையினர் வரவழைக்கப்பட்டு கடும் போராட்டத்திற்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தானின் டோங் மாவட்டத்தில் உள்ள தியோலி – யுனியாரா சட்டசபை தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் சார்பில் வாய்ப்பு கிடைக்காத நரேஷ் மீனா சுயேச்சையாக போட்டியிட்டார். இதனால், கட்சி விதிகளை மீறியதாக அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சமரவதா கிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் அவர், துணை கலெக்டர் அமித் சவுத்ரியின் சட்டையை பிடித்து இழுத்ததுடன் அவரது கன்னத்தில் அறைந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு காரணம் கூறிய நரேஷ் மீனா, ” ஓட்டுச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டது. பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என அதிகாரிகள் அனைவரும் பணியாற்றுகின்றனர். பா.ஜ.,வுக்கு ஓட்டுப்போட நெருக்கடி கொடுக்கின்றனர். அமித் சவுத்ரி தவறு செய்ததால் தான் அவரை அறைந்தேன்.” என்றார்.
போலீசார் அளித்த விளக்கத்தில், ” கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். அவர்களுடன் அமித்சவுத்ரி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவரை நரேஷ்மீனா கன்னத்தில் அறைந்ததாக” தெரிவித்தனர்.