September 8, 2026

Seithi Saral

Tamil News Channel

இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி பேட்டி

1 min read

AIADMK will win both constituencies in the by-election – Edappadi Palaniswami’s statement.

8.9.2026
இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம். அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை தக்க வைக்க தவெக நாடகம் நடத்துகிறது. அரசு அமைக்க போதிய பலமில்லாததால் அதிமுகவை சேர்ந்தவர்களை தவெக தாஜா செய்கிறது. தவெக அரசை ஆதரித்த கட்சிகள் எதிரப்பு மனநிலைக்கு வந்துவிட்டதால் அதிமுகவினரிடம் பேசுகின்றனர். 2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறுவோம்.

தவெக ஆட்சியில் நடந்துள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் அவர்கள் பதிலளிப்பது இல்லை. பட்ஜெட் தாக்கலானது முதல் மானியக் கோரிக்கை வரை, ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மாறி மாறி பேசி அவையின் பொன்னான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் சொல்வது இல்லை. எந்த கேள்வி கேட்டாலும் 3 அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள்.

45 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் நடந்த சம்பவத்தை தற்போது பேசி அவையின் நேரம் வீணடிக்கப்படுகிறது. எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை பேசுகின்றனர். நான் கேட்ட எந்த கேள்விக்கும் முதல்-அமைச்சர் பதில் சொல்லவில்லை. ஆன்லைன் வர்த்தக முதலீட்டு மோசடி தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு முதல்வரிடம் பதில் இல்லை. காவலர்களின் கோரிக்கைகள் குறித்த என் கேள்விகளுக்கும் எந்த பதிலும் இல்லை.

தவெகவின் ஆட்சி செயலிழந்த ஆட்சியாகத்தான் உள்ளது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என தவெக ஆதரவு கட்சியான இடதுசாரி கட்சியே கூறுகிறது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்த இடதுசாரிகள் குறைகூறும் அளவுக்குத்தான் அரசு உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொல்லும் காட்சிகள் செய்திகளில் வருகிறது.

ஊழலை ஒழிப்பதாக கூறுகின்றனர். இந்த ஆட்சி வந்த பிறகு தான் ஊழல் அதிகமாகிவிட்டது. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை பணத்தை பறிமுதல் செய்யும் அளவுக்கு ஊழல் அதிகரித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை எல்லா ஆட்சியிலும் செயல்பட்டுத்தான் வந்தது. ஆனால் தவெக ஆட்சியில் மட்டும்தான் லஞ்ச ஒழிப்பு சோதனை நடப்பது போல ரீல்ஸ் போடுகின்றனர்.

முதல்வர் வசம் உள்ள துறை மீது மற்றொரு அமைச்சர் பதிலுரை தருகிறார். இனியாவது முதல்-அமைச்சர் தனது துறையை கண்காணித்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். தவெக ஆட்சி அமைத்தபின் அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ளது. காவிரி படுகை மாவட்டங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளது. நெல் கொள்முதல் செய்யாததால் மழையில் நெல்மணிகள் நனைந்து சேதம் அடையும் அளவுக்கு சூழல் உள்ளது. விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்யவில்லை.

இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் தற்போதுள்ள ரூ.10 லட்சம் கோடி கடன், ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இவ்வளவு கடன் இருக்கும்போது இவ்வளவு திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஏற்கனெவே கடன் இருக்கும்போது புதிய திட்டங்களுக்கு எங்கிருந்து வருவாய் வரும்? மீண்டும் யார் கடனை அடைப்பது? மக்களின் வரிப்பணம் தானே கடனாக செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *