June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

அதிமுக கள ஆய்வு கூட்டங்களில் நிர்வாகிகள் இடையே மோதல்; கைகலப்பு

1 min read

Clashes break out between AIADMK executives during field inspection meetings

22.11.2024
அதிமுகவில் கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய `கள ஆய்வுக் குழு’ ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் நியமித்தார்.
இக்குழுவில், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, அ.அருணாசலம், பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து கடந்த 11-ம் தேதி இக்குழு கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று கள ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நெல்லை, கும்பகோணத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் நிர்வாகிகளிடையே மோதல் வெடித்தது. நெல்லையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் பாப்புலர் முத்தையாவுடன் மாவட்ட செயலாளர் கணேச ராஜா தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி மற்றும் மூத்த நிர்வாகிகள், மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அதைபோல தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச எழுந்தபோது அவரை இடைமறித்து நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மேடையில் இருந்தவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை திண்டுக்கல் சீனிவாசன் சமாதானம் செய்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *