June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் வன்முறை- 6 பாதுகாப்பு வீரர்கள் பலி

1 min read

Violence breaks out in Imran Khan supporters’ protest – 6 security personnel killed

26/11/2024
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 72) மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான்கானுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. எனினும் மற்ற வழக்குகளில் சிறை தண்டனை பெற்று வருவதால் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
இதற்கிடையே இம்ரான்கானின் ஆதரவாளர்கள் அவரை விடுதலை செய்ய கோரி வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி நடத்த இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. மேலும் பாதுகாப்பு கருதி ராணுவ வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. அதேபோல் பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு செல்போன் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டன.

ஆனால் இதனை பொருட்படுத்தாமல் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக சென்றனர். பஞ்சாப் மாகாணத்தில் நுழைந்தபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
எனவே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 4 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், இம்ரான்கானின் ஆதரவாளர்களின் போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 4 துணை ராணுவ வீரர்கள் மற்றும் 2 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களை கண்டதும் சுட அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *