காசா போரில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும்- மத்திய மந்திரி ஜெய்சங்கர் வலியுறுத்தல்
1 min readUnion Minister Jaishankar urges to stop casualties in Gaza war
9.12.2024
கத்தார் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில், கத்தார் நாட்டில் நடந்த 22-வது தோஹா மாநாட்டில் அவர் பங்கேற்றார். கத்தாரின் பிரதமர் மற்றும் வெளியுறவு துறை மந்திரியான ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான் பின் ஜஸ்ஸிம் அல் தானியை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில், இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை தொடர்ந்து வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் ஆகியவை பற்றி ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை மந்திரி ஜெய்சங்கர் மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து, பஹ்ரைன் நாட்டின் மனாமா நகரில் நடந்த கூட்டமொன்றில் அவர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பஹ்ரைனின் வெளியுறவு துறை மந்திரி டாக்டர் அப்துல்லத்தீப் பின் ரஷீத் அல் ஜயானி மற்றும் செக் குடியரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான தாமஸ் போஜர் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், மேற்காசியாவில் நடந்து வரும் மோதலை பற்றி குறிப்பிட்டார். அவர் பேசும்போது, இதில் முதன்மையான விசயம் என்னவென்றால், காசாவில் நடந்து வரும் போரில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என வலியுறுத்தினார்.
உடனடி போர்நிறுத்தம் தேவையான ஒன்றாக உள்ளது. அதிகளவிலான மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதுடன், பணய கைதிகளை திரும்ப கொண்டு வருவதும் அவசியப்படுகிறது என்று கூறியுள்ளார்.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரண மற்றும் பணிகள் கழகத்திற்கு இந்தியா தொடர்ந்து பங்காற்றி வருகிறது. சமீப ஆண்டுகளாக எங்களுடைய பங்கை நாங்கள் அதிகரித்து இருக்கிறோம். நாங்கள் நிவாரண பொருட்களை, குறிப்பிடும்படியாக மருந்துகளை அனுப்பி வைத்திருக்கிறோம். ஏனெனில் அதிக அளவில் மருந்துகளை உற்பத்தி செய்பவர்களாக இருக்கிறோம்.
காசாவுக்கு எகிப்து வழியே, பாலஸ்தீன அதிகாரிகளின் வழியே நாங்கள் மருந்துகளை வழங்கியிருக்கிறோம். லெபனான் அரசுக்கும் வழங்கியிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.