June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

பழனி கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட நகைகள் வங்கியிடம் ஒப்படைப்பு

1 min read

Jewelry received as offerings at Palani temple handed over to bank

20.12.2024
தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யும் வகையில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காணிக்கையாக பெறப்பட்ட 192 கிலோ 984 கிராம் பலமாற்றுப் பொன் இனங்கள் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இன்று (20.12.2024) ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.மாலா முன்னிலையில் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், காணிக்கையாக வரப்பெற்ற பயன்பாட்டில் இல்லாத 192 கிலோ 984 கிராம் பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி, தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளரிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;-
‘தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் இந்து சமய அறநிலையத்துறையில் திருக்கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்குளங்கள் மற்றும் திருத்தேர்களை சீரமைத்தல், திருக்கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேலும், திருக்கோவில்களின் மேம்பாட்டிற்கு தேவைப்படும் நிதி ஆதாரங்களை திரட்டும் வகையில் திருக்கோவில்களுக்கு வரவேண்டிய நிலுவையிலுள்ள வாடகை மற்றும் குத்தகை தொகையினை வசூலித்தல், திருக்கோவில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்து வருவாய் ஈட்டுதல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

திருக்கோவில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களை பிரித்தெடுத்து, பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கிட ஏதுவாக தமிழ்நாட்டை மூன்று மண்டலங்களாக பிரித்து ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி துரைசாமி ராஜு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மாலா, ரவிச்சந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் 23 திருக்கோவில்களில் பயன்பாடற்ற பொன் இனங்களை பிரித்து அதில் 13 திருக்கோவில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்கள் உருக்கி, 442 கிலோ 107 கிராம் எடையுள்ள சுத்த தங்க கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டு ஒன்றிற்கு ரூ.5.79 கோடி வட்டித் தொகையாக கிடைக்கப் பெற்று அந்தந்த திருக்கோவில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கடந்த வாரம் ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 28 கிலோ 906 கிராமும், திருச்சி மாவட்டம், குணசீலம், அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்கள் 12 கிலோ 595 கிராமும் மும்பையிலுள்ள மத்திய அரசின் தங்க உருக்காலையில் உருக்கிட பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 192 கிலோ 984 கிராம் எடையுள்ள பயன்பாடற்ற பொன் இனங்கள் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் 1,000 கிலோ எடை கொண்ட பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யும் போது ஆண்டிற்கு ரூ.12 கோடி வட்டித்தொகையாக கிடைப்பதோடு, ரூ.700 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு திருக்கோவில்களில் சொத்து மதிப்பும் உயர்வடைகின்ற அற்புதமான திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரித்துக் கொள்கிறேன்.’

இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், பழனி சார் ஆட்சியர் எஸ்.கிஷன் குமார், கூடுதல் ஆணையர்கள் சுகுமார், திருமகள், இணை ஆணையர்கள் மங்கயர்க்கரசி, வான்மதி, மாரிமுத்து, கார்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *