நெல்லை: கொலையாளிகளை சுட்டு பிடிக்காதது ஏன்?- ஐகோர்ட்டு கேள்வி
1 min read
Nellai murder incident – High Court order to Tamil Nadu government
20.12.2024
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமானோர் வழக்கு விசாரணைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இன்று காலை கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக வந்துள்ளார்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தபோது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று மாயாண்டியை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கும்பலிடம் இருந்து தப்பித்து நீதிமன்ற வளாகத்தில் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் மாயாண்டியை துரத்தி சென்றது.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வாசலுக்கு வந்தபோது மாயாண்டியை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மாயாண்டி சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாயாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் குமாரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் காவல்துறைக்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். அதில் “நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் கொலை நடந்துள்ளது. இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை? ஒரு குற்றம் நடைபெறும் பொழுது அதை தடுக்க முயல வேண்டுமே தவிர, குற்றம் நடந்த பிறகு குற்றவாளிகளை தேடுகிறோம் என்று சொல்வதில் என்ன நியாயம் உள்ளது’ என்றார். அப்பொழுது அரசு தரப்பு வழக்கறிஞர், ‘இந்த கொலை சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்தார்.
அதற்கும் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். ‘சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் குற்றவாளிகள் தப்பி ஓடாமல் அவர்களை முட்டிக்கு கீழே காலில் சுட்டுப் பிடித்திருக்கலாம். இல்லையென்றால் அவர்கள் தப்பிச் செல்ல முயன்ற வாகனத்தின் டயர்களை சுட்டு நிறுத்தி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் சம்பவ இடத்திலேயே குற்றவாளிகளை அங்கேயே கைது செய்திருக்கலாம். தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்கள் அனைத்திலும் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அது கடைபிடிக்கப்பட வேண்டும். நாளை நீதிபதிக்கும் இதேபோன்ற ஒரு நிலை ஏற்பட்டால் நீங்கள் இப்படித்தான் வேடிக்கை பார்ப்பீர்களா?’ என கேள்வி எழுப்பினர்.
‘இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. எனவே இந்த வழக்கை நாளை பிற்பகல் 4.30 மணிக்கு ஒத்திவைப்பதாகவும், இது குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.