August 28, 2026

Seithi Saral

Tamil News Channel

மாணவி மீதான பாலியல் வழக்கில் எப்.ஐ.ஆர் விவரங்களை வெளியிட்டது சட்டவிரோதம்-அண்ணாமலை குற்றச்சாட்டு

1 min read

Annamalai alleges that releasing FIR details in sexual assault case against student was illegal

26.12.2024
அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவி.னர் கைது செய்ததற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு பொறுப்பு.

திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *