June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலர்- மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

1 min read

Special floral tributes to the silver jubilee of the Thiruvalluvar statue – released by M.K. Stalin

31.12.2024
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நேற்று கன்னியாகுமரியில் கோலாகலமாக தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். முதல் நாளான நேற்று திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலத்தை முதல்-அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிலையில், 2-வது நாளான இன்று காலையில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சி கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான விழா பந்தலில் நடைபெற்றது. அப்போது அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன்பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காணும் நிகழ்ச்சியான இது என் வாழ்நாளில் சிறந்த நாள். வள்ளுவர் சிலையை திறந்தபோது கலைஞர் கருணாநிதிக்கு எப்படி இருந்திருக்குமோ அதே உணர்வுதான் எனக்கு உள்ளது. எவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு நமக்கு ஒரு வரலாற்று வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறார் கலைஞர். திருக்குறளாகவே வாழ்ந்தவர் கருணாநிதி. வள்ளுவத்தை போற்றும் தொண்டு கருணாநிதிக்கு இருந்தது.
தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார் கருணாந்தி. அதைபோல தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்துக் கொண்டே இருப்பதுதான் என் வாழ்நாள் கடமை. வள்ளுவரை கொண்டாடுவோம், கொண்டாடிக் கொண்டே இருப்போம். தமிழர்களுக்கான பண்பாட்டு அடையாளம் திருவள்ளுவர்.
ஒரு சிலை அமைத்ததற்கு வெள்ளி விழாவா என சில அதிமேதாவிகள் கேட்டனர். சுனாமியை எதிர்கொண்டு தாங்கி நிற்கும் இந்த திருவள்ளுவர் சிலை நமது பண்பாட்டு குறியீடு. நம் மதம் குறள் மதம், நம் நெறி குறள் நெறி என தந்தை பெரியார் கூறினார். காவி சாயம் பூச நினைக்கு தீய எண்ணங்களை வள்ளுவம் விரட்டியடிக்கும்.

திருவள்ளூவர் சிலைக்கு செல்ல 3 புதிய சுற்றுலா படகுகள் வாங்கப்படும். படகுகளுக்கு காமராஜர், நேசமணி மற்றும் ஜி.யு.போப் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படும். கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். மாவட்டம் தோறும் திருக்குறள் பயிலரங்கம் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் குறள் வாரமாக கொண்டாடப்படும். தனியார் நிறுவனங்களில் திருக்குறள் எழுதப்படுவதற்கு ஊக்குவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *