June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

அய்யா வைகுண்டர் அவதார தினம்- மு.க.ஸ்டாலின், அண்ணாமலை புகழாரம்

1 min read

Ayya ​​Vaikundar Avatar Day – M.K. Stalin, Annamalai Pugazharam

4.3.2025
தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர் அய்யா வைகுண்டர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர். சுவாமிதோப்பில் சமத்துவ கிணறும் வெட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு பகுதியில் அய்யா வைகுண்டரின் தலைமை பதி உள்ளது. உன்னில் இறைவனைப் பார் என்னும் உயர்ந்த நோக்கத்தோடு இங்கு கண்ணாடியே தரிசனத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது. அய்யா வைகுண்டரை பின்பற்றுபவர்கள் நெற்றியில் நீண்ட நாமமும், தலையில் தலைப்பாகையும் கட்டுவது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும், மாசி 20-ம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, அய்யா வழி மக்கள் தெய்வமாக போற்றி வழிபடும் அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டர் அவர்களின் 193-ஆம் பிறந்தநாள். “எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே! என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஒடுக்கப்படும் மக்களைக் காப்பதும், எளியவர்களுக்கு உதவிகள் செய்வதுமே தர்மம் என்று அன்பு நெறிகளை போதித்து, ஜாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானவராக இருக்கும் அய்யா வைகுண்டர் அவர்களின் 193 ஆவது அவதார தினத்தைக் கொண்டாடும் உலகளாவிய பக்தர்கள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடவுள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார் என்ற ஞானத்தைப் போதித்து, சமூக ஏற்றத்தாழ்வுகளை விலக்கி, ஆண் பெண் அனைவரும் சமம் என, சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர். உடல் தூய்மையையும், உள்ளத் தூய்மையையும் வலியுறுத்தி, மக்களிடம் சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை, தர்மம் போன்ற அறநெறிகளை வளர்த்தவர் அய்யா வைகுண்டர் அவர்கள்.

அதிகாரத்துவம், சமூக ஏற்றத்தாழ்வு, கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில், அய்யா வைகுண்டர் அவர்களின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வது முக்கியமானதாக இருக்கிறது. அய்யா வைகுண்டர் அவர்களின் அவதார தினமான இன்று, அவரின் கருத்துகளைப் பின்பற்றி, அவர் காண விரும்பிய, ஏற்றத்தாழ்வற்ற, அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதியேற்போம். அய்யா உண்டு!. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *