பஞ்சாப் எல்லையில் மின் இணைப்பை துண்டித்து இருட்டடிப்பு சோதனை
1 min read
Blackout test by disconnecting power supply at Punjab border
5.2.2025
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கத்திற்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அட்டாரி எல்லையில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி மூடல் மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குள் பயணிக்க அனுமதி மறுத்தும், அவர்களை நாட்டில் இருந்து வெளியேறவும் இந்திய வெளியுறவு செயலகம் உத்தரவிட்டது. இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையிலும் அவற்றை இந்தியா மூடியுள்ளது.
பாகிஸ்தானுடன் அனைத்து வகையான தபால் மற்றும் பார்சல் சேவையை நிறுத்தியது. இதுபோன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரித்து காணப்படுகிறது. ஒருவேளை போர் ஏற்பட்டால், அதனை எப்படி எதிர்கொள்வது என்று இரு நாடுகளும் அதற்கு தயாராகி வருகின்றன.
இந்த சூழலில், பஞ்சாப்பின் பெரோஸ்பூர் நகரில் கன்டோன்மென்ட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு (ஞாயிற்று கிழமை) 9 முதல் 9.30 மணிவரையிலான அரை மணிநேரத்திற்கு அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து இருட்டடிப்பு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெறுவதற்காக, துணை காவல் ஆணையாளர் மற்றும் பஞ்சாப் மாநில மின் விநியோக நிறுவனத்திடமும், அதற்கான முழு ஒத்துழைப்பை வழங்கும்படி பெரோஸ்பூர் கன்டோன்மென்ட் தலைமை செயல் அதிகாரி கேட்டு கொண்டார்.
இதன்படி, குறிப்பிட்ட நேரத்தில் மின் இணைப்பை துண்டிக்கும்படி, பஞ்சாப் மாநில மின் விநியோக நிறுவனத்திடம், அந்த அதிகாரி கேட்டு கொண்டார். இந்த தருணத்தில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யும்படி உங்களிடம் கேட்டு கொள்கிறேன் என்று துணை காவல் ஆணையாளரிடம் அதுபற்றிய கடிதத்தில் அந்த அதிகாரி குறிப்பிட்டு உள்ளார்.
போர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழலில், அதற்கு தயாராவதற்காகவும் மற்றும் இந்த இருட்டடிப்பு சோதனையை நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பதும் இந்த ஒத்திகையின் நோக்கம் ஆகும் என அந்த அதிகாரி கூறினார்.
இதனை முன்னிட்டு நபர் ஒருவர் ரிக்சா ஒன்றில் ஒலிப்பெருக்கி உதவியுடன் நகரம் முழுவதும் சுற்றி வந்து, கன்டோன்மென்ட் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு, இந்த ஒத்திகையை பற்றி அறிவித்தபடியே சென்றார்.